நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில், துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கி உள்ளது. அங்கு அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. அண்மையில், நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேரும், டெக்சாஸ் மாகாணத்தில் தொடக்கப் பள்ளியில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் 19 மாணவர்கள் உள்பட 21 பேரும் பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும், இதற்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்ற வல்லுனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி!
இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான துப்பாக்கி சீர்திருத்தங்கள் மாகாண செனட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு மாகாண கவர்னர் கேந்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் கவச உடை போன்றவற்றை பொது மக்கள் வாங்கவும் இந்த சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இது போன்ற சட்டத்தை நாடு முழுதும் அமல்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.