மதுரை: மதுரையில் ரூ.99 கோடியில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம் கட்டுமானப் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் மிக பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இந்த கட்டிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் 7 மாடிகளுடன் அமைகிறது. கன்னியாகுமரியில் ஆரம்பித்து தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த நூலகம் கட்டப்படுகிறது.
இந்த நூலகம் கட்டுமானப்பணியை கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆறுமாதம் நிறைவடைவதற்குள் தற்போது 80 சதவீதம் கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொடர்ச்சியான ஆய்வு மேற்கொண்டு இந்த கட்டுமானப் பணியை நேரடியாக கண்காணித்து வந்தார். சட்டமன்ற கணக்கு குழுவும் கலைஞர் நூலக கட்டுமானப்பணியை ஆய்வு செய்தது. அதனால், கட்டுமானப்பணியை திட்டமிட்டதை விட வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தார். அவருக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்பு வழங்கினர். அங்கிருந்து அவர் நேரடியாக மதுரை சொக்கி குளத்தில் உள்ள கலைஞர் நூலகம் அமையும் இடத்திற்கு வந்து அதன் கட்டுமானப் பணியை பார்வையிட்டார். அவர், கலைஞர் நூலகத்தின் நுழைவு வாயில் நின்று பார்த்து கட்டிடத்தை வடிவமைப்பை பார்த்தார். அதன்பிறகு அவர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
அவருக்கு அமைச்சர் எவ.வேலு, பொதுப்பணித்துறை அதிகாரிகள், கலைஞர் நூலகத்தில் அமையும் சிறப்பு அம்சங்கள், கட்டிடத்தின் தரம் மற்றும் தொழில்நுட்பங்களை பற்றி விளக்கின்றனர். அதன்பிறகு கலைஞர் நூலகத்தில் கட்டிடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கருத்தரங்கு கூடத்தில் ஒவ்வொரு 5 முதல் 10 நாட்கள் இடைவெளியில் கலைஞர் நூலகத்தின் கட்டிடத்தின் முன்னேற்றத்தையும், இனி நடக்கப்போகும் பணிகளை குறித்து வீடியோ எடுத்து அதனை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டு காட்டினர்.
இந்த ஆய்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மதுரை எம்பி. சு.வெங்கடேசன், ஆட்சியர் அனீஸ் சேகர், மாவட்டச் செயலாளர்கள் தளபதி, பொன்முத்துராமலிங்கம், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.