சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில், பானி பூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள, பில்ஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவ்கிராரி கிராமத்தில் உள்ள கிராமச் சந்தையில் உள்ள கடை ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சிறுவர்கள் பானிப் பூரி சாப்பிட்டனர். இதை அடுத்து அடுத்த நாள், பானி பூரி சாப்பிட்ட பலருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறுவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பில்ஹா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு கொண்டு சென்றனர்.
பாதிக்கப்பட்ட நான்கு பேரில், 9 வயது ஆகும் மீனாஸ்கி கோஷ்லே என்ற சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 18 பேர் சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த மாவட்டத்தின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பிரமோத் மகாஜன், உண்மையான காரணத்தைக் கண்டறிய உயர் மட்ட விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார். சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.