Vikram: “பொன்னியின் செல்வன் நாடகத்தைப் பார்த்துட்டு மணி சார் என்னைக் கூப்பிட்டார்” – இளங்கோ குமரவேல்

மிக முக்கியமான, அழுத்தமானக கதாபாத்திரங்களை மிக எளிதாக நடித்துவிடும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் இளங்கோ குமரவேல். அபியும் நானும், மொழி, குரங்கு பொம்மை போன்ற திரைப்படங்களில் கவனம் ஈர்த்தவர். தற்போது விக்ரம் படத்தில் மீண்டுமொருமுறை அசத்தியிருக்கிறார். சினிமா விகடனுக்கு அவர் அளித்த நேர்காணல்…

குரங்கு பொம்மை படத்தில்

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

லோகேஷ் கனகராஜ் மாதிரி டிடெய்லிங் தெரியவில்லை என்றாலும் நானும் கமல் சாரின் தீவிர ரசிகன்தான். சின்ன வயதிலிருந்தே அவரின் நடிப்பைப் பார்த்து தான் நானும் வளர்ந்தேன். அதனாலேயே எனக்கும் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அனுபவம். லோகேஷ் என்னிடம் கதை சொல்லும்போதே என் ரோல் குறித்து தெளிவாகச் சொல்லிவிட்டார். பகத் பாசில், விஜய் சேதுபதி, கமல் சார் மூன்று பேரும் இருக்கும்போது அவர்களுக்கு நடுவில் நின்று நான் நடித்தேன்.

நீங்கள் மேடை நாடகத்திலும் குறிப்பிடத்தக்க நடிகர். சினிமாவிலும் சிறப்பாக நடித்து வருகிறீர்கள். இவை இரண்டுக்குமான வேறுபாடாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?

நாடகம் என்பது அங்கு இருக்கும் அத்தனை ஆடியன்ஸையும் பார்த்து, அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் கேமரா முன் நடித்தால் மட்டும் போதும். ஒரு நகர பின்புலத்தில் இருந்து வரும் நடிகரென்றால் எளிதில் சினிமாவில் நடித்து விடுவார். ஆனால் இதே ஒரு தெருக்கூத்துக் கலைஞரை அழைத்து வந்து கேமரா முன் நடிக்கச் சொன்னால் அவருக்கு பழக்கம் இருக்காது. நீங்கள் தான் அவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். நடிப்பு என்பதும், உணர்வு என்பதும் ஒன்று தான். அதை வெளிபடுத்தும் விகிதாச்சாரம் தான் வேறு. அது மேடையில் சற்றே தூக்கலாக இருக்கும். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை.

குரங்கு பொம்மை படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பீர்கள். அந்தப் படம் எப்படி அமைந்தது?

இளங்கோ குமரவேல்

வித்தார்த்தும் கூத்துப் பட்டறையில் இருந்து வந்தவர்தான். அவர் மூலம் தான் இயக்குநர் நித்திலன் எனக்கு அறிமுகமானார். இதற்கு முன்னர் நான் அது போல ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததில்லை. அதனால் அவர் தான் அந்த கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் நடித்துக் காண்பித்தார். அதை அப்படியே நான் பின்பற்றிக் கொண்டேன்.

பொன்னியின் செல்வன் பட ஸ்கிரிப்டில் நீங்களும் வேலை செய்திருக்கிறீர்கள். அது குறித்து…

பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி நாங்கள் எடுத்த நாடகத்தைப் பார்த்து 2018-ல் மணி சார் என்னைக் கூப்பிட்டார். படத்தின் வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் போய்க் கொண்டிருக்கிறது. 1998-ல் முதல் பொன்னியின் செல்வன் நாடகத்தை நாங்கள் அரங்கேற்றினோம். பின் 2014 இல் மீண்டும் நாடகம் போட்டோம். அப்போது பிளாக்கில் எல்லாம் டிக்கெட் விற்றது. இப்போது வெகு விரைவில் அது திரையில் வரவிருக்கிறது.

அடுத்து என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

அடுத்து ஜான் லூதர் எனும் ஒரு மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இது தான் என் முதல் மலையாளப் படம். புஷ்கர் – காயத்ரி இயக்கிய சுழல் வெப் சீரியஸ் இல் நடித்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனின் கேப்டன் மில்லரில் தனுஷ் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்ததாக விக்கி கௌஷலின் ஒரு இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.