முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. முதலில் ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், சில நாள்களிலே முதல்வர் பதவி எடப்பாடி பழனிசாமி கைவசம் சென்றது. அப்போதைய ஓபிஎஸ் தர்மயுத்தம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, பின்னர் மீண்டும் ஒன்றிணைந்தது.
எடப்பாடி முதலமைச்சராகவே தொடர, பொதுச்செயலாளராக யாரும் பொறுப்பேற்கவில்லை. அதற்கு மாறாக, கட்சியில் புதிதாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு அது ஒ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டன.
மற்றொருபுறம், அதிமுகவின் பொதுச்செயலாளர் எனக் கூறி ஜெயலலிதாவின் தோழியான சசிகலா காரில் கட்சி கொடியுடன் வலம்வந்து கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது சசிகலா, சீக்கிரம் கட்சிக்கு திரும்புவேன் என தொண்டர்களுடன் பேசும் ஆடியோவும் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்ததும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இப்படி, அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அ.தி.மு.க வின் தலைமை குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் எம்.சுரேஷ் என்பவர் ஒட்டியுள்ள இந்த போஸ்டரில், அம்மா நல்லாசியுடன் விரைவில் அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் டப்பாடி பழனிசாமியை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் ஒ.பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் சாலையிலும், ஒபிஎஸ் மகனும் தேனி எம்.பி.,யுமான ஒ.பி.ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.