அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு – ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கட்சியின் அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுக்கூட்டம் வரும் 23-ம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான எஸ்.சூர்யமூர்த்தி என்பவர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் விதிகளுக்கு முரணாக அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக கே.பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ அல்லது கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை. மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், உரிமையியல் நீதிமன்றத்துக்குத்தான் உரிமை உள்ளது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

இதுநாள் வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. அதேபோல அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்றும் எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை. எனவே கட்சி விதிகளுக்குப் புறம்பாக வரும் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுக்கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை பெருநகர 4-வது உதவி உரிமையியல் நீதிமன்றம், இதுதொடர்பாக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்,ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.