‘தமிழகத்தில், 4,853 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், கூடுதலாக 4,519 ஆசிரியர்கள் தேவை என்பதாலும், எல்.கே.ஜி, யூ.கே.ஜி ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்’ என தொடக்கக் கல்வி இயக்குனரகம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை தொடக்கக் கல்வி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் 2013 – 2014-க்கு பின், ஆசிரியர்கள் புதிதாக நியமிக்காததால் ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
அரசு தொடக்கப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை உள்ளதாலும், ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை கவனம் செலுத்தி கற்றல் இடைவெளியை குறைக்க வேண்டும் என்பதாலும் ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 4,853 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், கூடுதலாக 4,519 ஆசிரியர்கள் தேவை என்பதாலும், அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்ற மொத்தம் 9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளை எடுத்து வந்த ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கே மாற்றப்பட்டனர்.
அவர்களுக்கு மழலையர் வகுப்புகளில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல், புரிதலின்மையே நீடித்தது. மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும், தொடக்கப்பள்ளிகளில் மாணவர் தரத்தை உயர்த்தவுமே ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர்.
இந்த ஆண்டு முதல் அங்கன்வாடிகளில் ஏற்கனவே இருந்த குழந்தைகளுக்கு முந்தைய நடைமுறையைப் பின்பற்றி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிகமாக கற்றல் செயல்பாட்டை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.