சென்னை: கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஏற்கனவே ஆபரேசன் கஞ்சா என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், இனிமேல் கந்துவட்டி கொடுமைகளை தடுக்க ஆபரேசன் கந்துவட்டி என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து உள்ளார்.
கடலூர், புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையானது. ஏற்கனவே கஞ்சா, கள்ள லாட்டரி, ஆன்லைன் ரம்மி, கந்துவட்டி கொடுமை என பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், கந்துவட்டி கொடுமையும் மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது விவாதப்பொருளாகவும் மாறி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. திமுக ஆட்சியில் தமிழகம் எதை நோக்கி செல்கிறது என்றே தெரிய வில்லை. ஒரே கொலை கொள்ளை கற்பழிப்பு கந்துவட்டி கொடுமை நில அபகரிப்பு போன்றவை தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நிம்மதி யாக வாழ வழியில்லை என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் உடனடியாக விசாரித்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.