புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரின் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர் நீல்காந்த் மணி பூஜாரி. இவர், தலைநகரான லக்னோவில் வசிக்கிறார். மேலும் அங்கு அலிகன்ச் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் தீவிரத் தொண்டராக உள்ளார்.
இந்நிலையில் நீல்காந்தின் கைப்பேசி எண் வாட்ஸ்-அப்பிற்கு அறிமுகமற்ற ஒருவரிடம் இருந்து 2 தினங்களுக்கு முன் ஒரு குழும இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில் சேரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நீல்காந்த் இதனை ஏற்று குழுமத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அதில் இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் வந்த மிரட்டல் செய்தியை கண்டு அதிர்ந்துள்ளார்.
உ.பி.யில் லக்னோ மற்றும் உன்னாவ் நகரிலும் கர்நாடகாவில் 4 இடங்களிலும் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து லக்னோவின் மடியோன் காவல் நிலையத்தில் நீல்காந்த் உடனே புகார் அளித்தார்.
போலீஸார் இப்புகாரை பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாட்ஸ் அப் தகவல் தமிழகத்தில் இருந்து வந்ததை கண்டறிந்தனர். மேலும் இதை அனுப்பியவர் புதுக்கோட்டையின் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த அன்சார் அலி என்பவரின் மகன்ராஜ் முகம்மது (22) என கண்டறிந்தனர்.
இந்த தகவலை தமிழக போலீஸாருக்கு உ.பி. போலீஸார் தெரியப்படுத்தினர். இதையடுத்து திருக்கோகர்ணத்தில் ராஜ் முகம்மதுவை பிடித்து தமிழக போலீஸார் விசாரித்துள்ளார். இதில் அத்தகவலை தாம் அனுப்பியதாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து உ.பி.யின் எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு படையின் ஒரு குழுவினர் நேற்று காலை லக்னோவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தனர். இவர்களும் தமிழக போலீஸார் உதவியுடன் ராஜ் முகம்மதுவிடம் விசாரித்தனர். பிறகு அவரை கைது செய்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக ராஜ் முகம்மது குறிப்பிட்டிருந்தார். எனினும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி.யின் எஸ்ஐடி வட்டாரங்கள் கூறும்போது, “ராஜ் முகம்மது 10-ம் வகுப்பு பயில்வது முதல் இதுபோன்ற மிரட்டல்களை பலருக்கும் அனுப்பியுள்ளார். அவர் மனநிலை சரியில்லாமல் இவ்வாறு செய்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். இதற்காக, புதுக்கோட்டை அரசு மனநல மருத்துவரிடமும் ராஜ் முகம்மதுவை கொண்டுசென்று பரிசோதனை செய்தோம். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை லக்னோ அழைத்துவர உள்ளோம்” என்று தெரிவித்தன.
இதனிடையே உ.பி. ஏடிஎஸ் குழுவை போல கர்நாடகா போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்களும் சென்னை வந்து ராஜ் முகம்மதுவிடம் விசாரிக்க உள்ளனர். இதற்கு முன் ஏப்ரல் 4-ல்உ.பி.யின் கோரக்பூரில் ஐஐடி பட்டதாரியான அகமது அப்பாஸி முர்தஜா என்பவர் கள்ளத் துப்பாக்கியுடன் காவல் நிலையம் முன் மிரட்டியிருந்தார். இந்த வழக்கிலும் உ.பி.யின் எஸ்ஐடியினர் தமிழகம் வந்து விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
இதில் முர்தஜாவின் உறவினர் தமிழகத்தின் ஒரு நகரில் வசிப்பதாகவும் அவர்களுக்கு முர்தஜா மிரட்டலில் தொடர்பு இல்லை என தெரிந்து எஸ்ஐடியினர் உ.பி. திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.