கொழும்பு:”கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து நம்மை காப்பாற்றுவதற்கு இந்தியா மட்டுமே உதவி செய்து வருகிறது” என இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் தெரிவித்தார்.
நம் அண்டை நாடான இலங்கை இதுவரை காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலக நேரிட்டது. இதையடுத்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். நாட்டின் நிதி அமைச்சராகவும் அவர் உள்ளார்.நிதி சிக்கலில் இருந்து மீள ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
இது குறித்து பார்லிமென்டில் ரனில் விக்ரமசிங்கே நேற்று பேசியதாவது :நாம் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம். இதில் இருந்து மீள பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியா மட்டுமே நமக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான பேச்சு நடந்து வருகிறது.
நிதி நெருக்கடியால் சர்வதேச கடன்களுக்கான தவணைகளை நாம் நிறுத்தி வைத்தோம். இது தொடர்பாக சில நிபந்தனைகளை சர்வதேச நிதியம் கூறியுள்ளது.இது நமக்கு மிகவும் புதியது. அதனால் தெளிவான நடைமுறைகளை தெரிவித்து கடன் வழங்க தேவையான உதவிகளை செய்யும்படி சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜியார்ஜிவாவிடம் கேட்டுள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement