இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்: அல்-கொய்தா மிரட்டல்!

தேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் டில்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து உலக அளவில் சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் பாஜக ஊக்குவிக்காது” என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

ஜூன் 6ஆம் தேதியிட்ட அக்கடிதத்தில், “நபிகளின் (இஸ்லாமிய மத இறைதூதர்) கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. அதேபோல், பாஜக நிர்வாகிகளின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், “அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா., எப்போதும் ஊக்குவிக்கும்.” என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, வருகிற 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நுபுர் சர்மாவுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.