“இந்திய தேசிய காங்கிரஸில் இந்தியரும் இல்லை… தேசியமும் இல்லை!" – ஜே.பி.நட்டா தாக்கு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற பா.ஜ.க-வின் மாநில செயற்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடு இப்போது காங்கிரஸிலிருந்து மறைந்து விடுதலையாகிவிட்டது. காங்கிரஸ், இப்போது யார் தலைவர், யார் தொண்டர் என்ற எந்த வரையறையும் இல்லாமல் இயங்குகிறது. அதே போல, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸிடம் கொள்கைகளே இல்லை. மிக விரைவில் மேற்கு வங்கத்தில் ஜனநாயக வழியில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்.

மம்தா பானர்ஜி

40 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸைச் சேர்ந்த என் நண்பர்கள், `நட்டாஜி, உங்களுக்கு அரசியல் புரியவில்லை. தவறான கட்சியில் நீங்கள் சரியானவராக இருக்கிறீர்கள்!’ என்று சொல்வார்கள். அவர்களுக்குப் பதிலளிக்க இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் அவர்களிடம் கேட்கிறேன், எது தவறான கட்சி? முன்னாள் உ.பி. முதல்வர் முலாயம் சிங்கின் ஆட்சி போகும் என்று யாரும் எதிர்பார்த்தார்களா?

காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்திலிருந்து விடுதலையாகிவிடும் என்று யாருமே நினைக்கவில்லை. எனவே, இனியும் காங்கிரஸ் சுதந்திரமாகவே இருக்கட்டும். உத்தரப்பிரதேசத்தைப் போலத் தெலங்கானா, ஆந்திராவிலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். ஏனென்றால், பா.ஜ.க-வுக்கு மட்டுமே தலைவர், கொள்கை, அதற்கென பணியாற்றும் தொண்டர்கள், அதற்கான சூழல் உள்ளது.

ராகுல் காந்தி – சோனியா காந்தி

பா.ஜ.க-வில் மட்டுமே தலைவர்களின் விருப்பமும், தொண்டர்களின் விருப்பமும் இணைந்து செயல்படுகிறது. சில கட்சிகளுக்குத் தொண்டர்கள் உள்ளனர். ஆனால், தலைவர்கள் இல்லை. தலைவர்கள் இருக்கும் இடத்தில் கொள்கை இல்லை. பா.ஜ.க-வுக்கு மட்டுமே தலைவர், கொள்கை என இரண்டுமே உள்ளது.

இந்திய நாட்டிலுள்ள அனைத்து மாநிலக் கட்சிகளும் ‘குடும்ப’ கட்சிகளாக மாறிவிட்டன. இந்திய தேசிய காங்கிரஸில் இந்தியரும் இல்லை… தேசியமும் இல்லை. அதன் தலைவர்கள் லண்டனிலிருந்து தொண்டர்களுடன் பேசுகிறார்கள். அது சகோதர-சகோதரிகளின் கட்சியாகவே மாறிவிட்டது” என நேரடியாகக் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சாடினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.