டிஜிட்டல் இந்தியாவில் மிகவும் பிரபலமான எளிதான பணப்பரிமாற்ற முறையாக இருப்பது UPI சேவைதான். கூகுள் பே, போன் பே போன்ற பல செயலிகள் மூலம் சுலபமாக பயனர்கள் இந்த முறை பணப்பரிமாற்றத்தை நித்தமும் உபயோகித்து வருகிறார்கள்.
இந்தியாவில் 26 கோடிக்கும் மேலான தனி நபர்களும், 5 கோடிக்கும் மேலான வணிகர்களும் இந்த UPI சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். 2022 மே மாதத்தில் மட்டுமே 594.63 கோடி பரிவர்த்தனை மூலம் ரூ.10.40 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த UPI சேவைகள் இதுவரையில் டெபிட் கார்டுகள் மூலம் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளை இணைத்து பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சேவையில் தற்போது கிரெடிட் கார்டுகளையும் இணைத்து யுபிஐ சேவைகளை பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வட்டி விகித அறிவிப்பு, யுபிஐ சேவைகள் உள்ளிட்டவை குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் RBI ஆளுநர் சக்தி காந்ததாஸ்.
அதில் ஒன்றுதான் UPIல் கிரெடிட் கார்டு சேவையை பயன்படுத்துவது.
அதன்படி UPIல் முதற்கட்டமாக Rupay கிரெடிட் கார்டுகளை இணைத்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டப்பின் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியாக UPI சேவையில் டெபிட் கார்டை போன்று கிரெடிட் கார்டையும் இணைப்பதால் கார்டை ஸ்வைப் செய்யாமல் QR கோட் அல்லது UPI ID மூலமே வாடிக்கையாளர்கள் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம். இந்த சேவையை பெற UPI செயலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு OTP-ஐ பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.
ALSO READ: ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்து முதல் இந்தியர்.. வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய கோலி!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM