புதுடெல்லி: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், சோனியா தரப்பில் மறு தேதி கேட்டு அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் நிறுவனப் பங்குகளை, வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, அவரது மகன் ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது. இவர்களில் சோனியா காந்தி இன்றும் (ஜூன் 8), ராகுல் காந்தி வரும் 13ம் தேதியும் ஆஜராக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சோனியா காந்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் லேசான காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் இருந்தன. பரிசோதனை செய்து பார்த்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அவர், மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்றைய பரிசோதனை முடிவில் சோனியா காந்திக்கு, கொரோனா நெகடிவ் என்று வந்தது. அதனால், இன்று அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக சோனியாகாந்தி, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சோனியா காந்தி மருத்துவர்களின் ஆலோசனையில் ஓய்வெடுத்து வருவதால், அவரது சார்பில் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், அமலாக்கத்துறை அறிவிக்கும் அடுத்து வரும் தேதியில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.