இலங்கை அதிபரின் அதிகாரங்கள் பறிப்பு மசோதா – இருதுருவங்களாக பிரதமரும் அதிபரும்; ஒரு வாரத்திற்கு மசோதா ஒத்திவைப்பு!

கொழும்பு,

இலங்கை சிக்கியிருக்கும் கடும் நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு, தொலைநோக்கு பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதில் முக்கியமான ஒன்று, இலங்கை அதிபரின் வானளாவிய அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில் 21வது சட்ட திருத்தம்.

இலங்கை அரசியலமைப்பின் 21வது சட்டத் திருத்தத்தின் முன்மொழியப்பட்ட வரைவு திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அமைச்சரவை ஒரு வாரத்திற்கு இதனை ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, 19வது சட்டத்திருத்தத்தை நீக்கிய பின்னர் தான் அரசியலமைப்பின் 20ஏ முலம் அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில்,இந்த 21வது சட்டத்திருத்தம், அரசியலமைப்பின் 20ஏ-ஐ ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பிரதமரமாக ரணிலை பதவியேற்க பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதிபரின் அதிகாரத்தை குறைக்க தயார் என்று கோத்தபய தெரிவித்தார். ஆனால், தற்போது அதை எதிர்க்கிறார்.

அதிபரின் அதிகாரத்தை குறைக்க அரசு தலைமை வழக்கறிஞர்களுடன் பிரதமர் ரணில் ஆலோசனை நடத்தி 21வது சட்டத்திருத்தத்தை உருவாக்கி உள்ளார். அதில், அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதை அமைச்சரவைக்கு ஒப்புதலுக்கு அனுப்ப முயற்சிகள் நடந்து வருகிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு அளித்து வருவதால், ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா எம்.பி.க்கள் மூலம் கோத்தபய மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

அமைச்சரவையில் பெரும்பாலும் ஆளும் கட்சி எம்.பிக்களே உள்ளதால், இந்த சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதில் பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.