ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையைச் சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தாயார் இந்திராணி தனது கருமுட்டையை விற்பனை செய்துவந்த நிலையில், தன் மகளின் கருமுட்டையையும் விற்பனை செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஜூன் 1-ம் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குற்றத்தில் தொடர்புடைய சிறுமியின் தாயார் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகராகச் செயல்பட்ட மாலதி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆதார் அட்டையில் சிறுமியின் வயதை ஜான் என்பவர் மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜான் கைதுசெய்யப்பட்டார். இவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளன.
இந்திராணி சிறுமியின் 14 வயது முதல் கருமுட்டைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்துள்ளார். இதுவரை எட்டு முறை சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் போன்ற பல்வேறு இடங்களில் விற்பனை செய்துவந்திருக்கிறார். மேலும், கேரளா ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் சிறுமி அழைத்துச்செல்லப்பட்டு கருமுட்டை விற்பனை செய்திருக்கிறார்கள். சிறுமியின் பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், சிறுமி அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். அந்த சிறுமியிடம் மருத்துவத்துறை உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி அளித்துள்ள தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கடந்த மூன்று ஆண்டுகளின் ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு வருகின்றனர். ஆந்திரா மற்றும் கேரளாவுக்குச் சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திவரும் நிலையில், மற்றொரு பக்கம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள். காவல்துறையினருக்கு, மருத்துவத்துறை அதிகாரிகள் பல தகவல்களை அளித்துள்ளார்கள். அதனடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் பல தனியார் மருத்துவமனைகள் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.