டெல்லி: வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 0.5 சதவீதம் உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. ரெப்போ வட்டி விகித உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் உயர்வுக்கு தக்காளி விலை உயர்வும் காரணம். பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. 2022-23ம் நிதியாண்டில் பணவீக்க விகிதம் 6.7%ஆக அதிகரிக்கும். தென் மேற்கு பருவமழை போதிய அளவில் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும். 2022 -23 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2%ஆக இருக்கும். தொடர்ந்து நிலைத்து நிற்கும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் இவ்வாறு கூறினார். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, வாகன, தனியார் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும்.