லக்னோ, உன்னாவ் நகரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை உ.பி பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளது.
ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், பேராசிரியருமான நீலகந்த் பூஜாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, உத்தரப் பிரதேச போலீஸார் லக்னோவின் மடியான் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
புகார்மனுவில் கூறியிருப்பதாவது, வாட்ஸ்அப் குழுவில் சேர அழைப்பு விடுக்கும் இணைப்பு சனிக்கிழமை அனுப்பப்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் குழுவில் சேர்ந்தபோது, மிரட்டல் விடுக்கப்பட்டது. அலிகஞ்சில் சர்ஸ்வதி ஷிஷு மந்திர் பள்ளியில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக கூறியது மட்டுமின்றி கர்நாடகாவில் மேலும் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப் போவதாகவும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏடிஎஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் நவீன் அரோரா கூறியதாவது, ” சர்வதேச எண்களில் இருந்து புகார்தாரருக்கு ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மெசேஜ் வந்துள்ளது. அந்த எண் குறித்து விசாரணை நடத்தி, மெசேஜ் வந்த இடத்தை ட்ராக் செய்தோம். பின்னர், தமிழ்நாடு போலீஸ் உதவியுடன் அந்நபரை காவலில் எடுத்துள்ளோம். அடுத்தக்கட்ட விசாரணைக்காக அந்நபரை லக்னோவிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் ஏதெனும் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையவரா அல்லது சொந்தமாக மிரட்டல் விடுத்தாரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.