இந்துக் கடவுள் அவமதிப்புக்கு நாங்கள் நீதிமன்றம் செல்வதுபோல் நீங்கள் நீதிமன்றம் செல்லுங்கள் என முஸ்லிம் மக்களுக்குக் கூறி நூபுர் சர்மாவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத்.
“நூபுர் சர்மா அவர் கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். நீங்களும் அதையே செய்யுங்கள். அதைவிடுத்து டான் ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை. இங்கே, சீராக இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்” என்று கூறி நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சர்ச்சைப் பேச்சுகளின் நாயகியான பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இக்கருத்தை பதிவு செய்துள்ளார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்ளாக இருந்த நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி குறித்து அவதூறாக கருத்து கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இருவரும் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து, பாஜக ஊடகப் பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள், தலைவர்கள் மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கலாம். எந்தவொரு மதத்தின் தலைவர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நூபுர் சர்மாவின் பேச்சை ஆதரித்து கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். கடந்த 2021 மே மாதம், தொடர்ந்து சர்ர்சையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் கூறி, கங்கனாவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது ட்விட்டர் நிறுவனம். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் இஸ்டாகிராமில் தனது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.