எதிர்வினை ஆற்றிய அரபு நாடுகள்… இனி பாஜக புள்ளிகளுக்கு வாய்ப்பூட்டு போடுமா மோடி அரசு?!

பா.ஜ.க நிர்வாகிகளான நுபுர் ஷர்மாவும், நவீன் ஜிண்டாலும் நபிகள் நாயகம் குறித்து வெளிப்படுத்திய சர்ச்சைக் கருத்துகள், உலக நாடுகள் பலவற்றிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குப் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. மத்திய அரசு தரப்பில் இந்த விவகாரத்தில் விளக்கமளித்திருந்தாலும், உலக அரங்கில் பா.ஜ.க அரசுக்கு இது பெரும் பின்னடைவு ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. `இனியாவது பா.ஜ.க-வினர் அடக்கி வாசிப்பார்களா?’ என்ற கேள்வியை எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பிவருகிறார்கள். இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?

அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசி சர்ச்சையைக் கிளப்பினார். மற்றொரு பா.ஜ.க நிர்வாகியான நவீன் ஜிண்டால், தனது ட்விட்டர் பக்கத்தில் நபிகள் குறித்து தவறான கருத்துகளைப் பதிவிட்டதும் சர்ச்சையானது. பா.ஜ.க நிர்வாகிகளின் சர்ச்சைக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, உலகம் முழுக்க இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

நுபுர் ஷர்மா

தொடர்ந்து கத்தார், ஓமன், சவுதி அரேபியா, இரான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளும் இதற்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பும் இந்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலிருக்கும் தாலிபன் அரசும் இந்த விவகாரத்தில் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறது.

கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையில், `நபிகள் நாயகத்துக்கு எதிராக இந்தியாவின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக இந்திய அரசின் கண்டனத்தையும், பொது மன்னிப்பையும் எதிர்பார்க்கிறோம். இப்படி இஸ்லாத்துக்கு எதிரான பேச்சுகளை எந்தவித தண்டனையும் இல்லாமல் அப்படியே விடுவது மனித உரிமைகளுக்கு ஆபத்தாக அமைவதோடு, பாரபட்சத்துக்கும் ஓரவஞ்சனைக்கும் வழிவகுக்கும், அது வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும்’ என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்திய அரசு

இதற்கு பதிலளித்த கத்தாருக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல், “இந்தக் கருத்துக்களுக்கும் இந்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்களின் கலாசாரத்தின்படியும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின் படியும் இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது” என்று கூறியிருந்தார். பா.ஜ.க தேசியச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், “மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கு எதிரானது. எங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது” என்று சொல்லப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நபிகள் நாயகத்துக்கு எதிராகக் கருத்துப் பதிவிட்ட நவீன் ஜிண்டால் பா.ஜ.க-விலிருந்து நீக்கப்பட்டார். நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கத்தார் அரசு வரவேற்றிருந்தாலும், `இந்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் பூதாகாரம் ஆகியிருக்கும் நிலையில், பா.ஜ.க-வின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் சில கருத்துகளை முன்வைக்கின்றனர். “பா.ஜ.க நிர்வாகிகள் வெளிப்படுத்திய கருத்துகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் பாதி, அரபு நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. லட்சக்கணக்கான இந்தியர்கள் அரபு நாடுகளில் வேலை செய்கின்றனர். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் அவதூறு பரப்பிய நிர்வாகிகள்மீது உடனடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது பா.ஜ.க.

பாஜக

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை அடிக்கடி இஸ்லாமியர்கள் குறித்து தவறான கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். தற்போது இந்த விவகாரம் பெரிதான பிறகு, ஹிஜாப் விவகாரம், புல்டோசர் கொண்டு இஸ்லாமியர்களின் வீடு இடிக்கப்பட்டது என அனைத்தையும் தோண்டி எடுத்து, வெளிநாடுகளில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகள் கேள்வி எழுப்பிவருகின்றன. எனவே, `இனிமேல் இஸ்லாமிய மதம் குறித்த சர்ச்சையான கருத்துகளை பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவிக்கக்கூடாது’ என்று கட்சித் தலைமையிலிருந்து நிச்சயம் அறிவுரைகள் சென்றிருக்கும். இதற்கு மேலும் இதுபோன்ற கருத்துகளை பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்தால், இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்குமிடையேயான உறவில் விரிசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.