கொழும்பு:’இலங்கையில் பெட்ரோல் – டீசல் கிடைப்பதில் அடுத்த மூன்று மாதங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் என்பதால், மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இது குறித்து, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்லிமென்டில் பேசியதாவது:இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தபோதெல்லாம் நமக்கு உதவிய பல்வேறு நாடுகளில் இந்தியா, சீனா, ஜப்பான் முன்னிலை வகிக்கின்றன.இந்த நாடுகளுடன் எப்போதும் வலுவாக இருந்த உறவு இப்போது பலவீனமாகி உள்ளது. அதை மீண்டும் வலுப்படுத்த வேண்டும்.
ஒரு மாத எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இலங்கை அரசு, 3,850 கோடி ரூபாய் செலவிடுகிறது. ‘இந்த ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் விலை சர்வதேச அளவில் 40 சதவீதம் உயரும்’ என, கூறப்படுகிறது.எனவே, எரிபொருள் வினியோகத்திற்கு, ‘கூப்பன்’ முறையை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.
எரிபொருள் வாங்க அடுத்த ஆறு மாதங்களுக்கு, 25 ஆயிரத்து 410 கோடி ரூபாய் தேவைப் படுகிறது. எனவே, பெட்ரோல் – டீசல் கிடைப்பதில் அடுத்த மூன்று மாதங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் என்பதால், மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.சமையல் எரிவாயு இறக்குமதிக்கு பல்வேறு உதவிகள், உள்ளூர் கரன்சிகள் மற்றும் இந்திய அரசின் கடன் உதவிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். சமையல் எரிவாயு இறக்குமதிக்கு மாதம் ஒன்றுக்கு 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு ஐ.நா., சபை உலகளாவிய வேண்டுகோளை நாளை விடுக்க உள்ளது. இதன் வாயிலாக உணவு, விவசாயம் மற்றும் மருத்துவ துறைகளுக்கு அடுத்த நான்கு மாதங்களில் 370 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தாமதமாகும் அமைச்சரவை ஒப்புதல்!
இலங்கை அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்த மசோதா, அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அனைத்து கட்சியினரும் ஒப்புதல் அளித்த பின், அமைச்சரவை ஒப்புதல் வழங்க, நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே, அமைச்சரவை ஒப்புதலுக்காக மீண்டும் அடுத்த வாரம் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement