இந்திய மகளிர் அணியின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக அறியப்படும் 39 வயதான மித்தாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டின் டெண்டுல்கர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். இன்று இந்தியாவில் பல பெண்கள் கிரிக்கெட்டுக்குள் நுழைய வேண்டும் என்று உழைத்துக் கொண்டு இருப்பதற்கு இவரே முக்கிய காரணம். ஆண்கள் மட்டுமே சாதிக்கும் அப்போதைய கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைத்தவர்.
1999-ம் ஆண்டு முதல் (19 வயது முதல்) இந்தியாவுக்காக ஆடிவரும் மித்தாலி ராஜ், இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் சரித்திரத்திலேயே ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தவர். இந்தியாவுக்காக இதுவரை 12 டெஸ்ட் போட்டிகள், 232 ஒருநாள் போட்டிகள், 89 டி20 போட்டிகள் ஆகியவற்றில் விளையாடியுள்ளார். இவற்றில் மொத்தம் 195 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
இது மட்டுமின்றி, இரண்டு முறை இந்திய அணியை உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றிருக்கிறார். மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6000 ரன்கள் குவித்த முதல் பெண்ணும் இவரே. ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 7805 ரன்கள் அடித்துள்ளார். இவற்றுள் 7 சதங்களும், 64 அரை சதங்களும் அடக்கம். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக இரட்டை சதம் (214 ரன்கள், 2002-ல் இங்கிலாந்துக்கு எதிராக) அடித்த ஒரே பெண் கிரிக்கெட்டரும் இவர்தான்.
இவரின் சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு, தலை சிறந்த வீரர்களுக்குக் கொடுக்கப்படும் அர்ஜுனா விருதை 2003-ம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் 2015-ம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது.
இப்படி மகளிர் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைத்த மித்தாலி ராஜ் தற்போது அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லா பயணங்களையும் போலவே இந்தப் பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. நான் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இந்திய அணியைப் பல வருடங்களாகச் சிறப்பாக வழி நடத்தியதற்குப் பெருமைப்படுகிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை இந்தியப் பெண்கள் அணியையும், என்னையும் சிறந்த வடிவத்திற்குக் கொண்டு வந்துள்ளது. போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், பெண்கள் கிரிக்கெட்டிற்கு வேறு வகையில் நிச்சயம் என் பங்களிப்பைச் செலுத்துவேன். என்னுடைய ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய 2வது இன்னிங்ஸை உங்களுடைய ஆதரவுடன் ஆரம்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.