இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி வெளியிட்ட ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை அளித்து வருகிறது.
இதுவரை எல்ஐசி ஐபிஓவில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.
இந்த நிலையில் எல்ஐசி ஐபிஓவிற்கு எதிர்காலம் உண்டா? பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்ப்போம்.
ரூ.1 லட்சம் கோடி இழப்பு.. எல்ஐசி முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
எல்.ஐ.சி பங்கு
எல்ஐசி தனது புதிய மூலதன பங்கீட்டை பங்குச் சந்தையில் ரூ.949 என பட்டியலிட்ட நிலையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் தற்போது 760 ரூபாய் என்ற அளவில் மிக மோசமாக இறங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எல்ஐசியின் பங்கு 150 ரூபாய்க்கு மேல் சரிந்து உள்ள நிலையில் மேலும் சரியும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
20% நஷ்டம்
எல்ஐசி பங்கில் முதலீடு செய்தவர்கள் தற்போது 20 சதவீத முதலீட்டை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொருளாதார நிபுணர்கள் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளின் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் பங்குகள் 875 ரூபாய் வரை உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்தாலும் அதன் பட்டியலிடப்பட்ட விலையான ரூபாய் 949 என்பது இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
சிறு முதலீட்டாளர்கள்
சிறு முதலீட்டாளர்கள் தான் எல்ஐசி நிறுவனத்தை இதுவரை தாங்கிப் பிடித்து உள்ளனர். இந்த பங்கின் விலை 20 சதவீதம் குறைந்த போதிலும் மீண்டும் உயர்ந்து விடும் என்ற நம்பிக்கை சிறு முதலீட்டாளர்கள் இருப்பதே இந்நிறுவனத்தின் பங்குகள் மேலும் வீழ்ச்சி அடையாமல் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள்:
ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை நிபுணர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் அதன் பட்டியலிடப்பட்ட விலைக்கு உயர இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர்.
பொதுத்துறை நிறுவனங்கள்
எல்ஐசி மட்டுமின்றி அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் அனைத்துமே கிட்டத்தட்ட நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 22 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் அதில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் தான் வர்த்தகமாகி வருகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்தாலும் அதன் மூலதன விலைக்கு அந்நிறுவனத்தின் பங்குகள் எட்டுமா? என்பது சந்தேகமே.
என்ன காரணம்?
இதற்கு முக்கிய காரணம் பொதுத்துறை நிறுவனங்களின் ஐபிஓவில் இருந்து கிடைத்த பணத்தை அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அரசு பயன்படுத்தாமல் மற்ற வளர்ச்சி திட்டங்களுக்காக பயன்படுத்துவதே என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக எல்ஐசி நிறுவனத்தைப் பொறுத்தவரை எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மூலம் கிடைத்த பணத்தை எல்ஐசியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தாமல் அரசு மற்ற துறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதே இந்த பங்கின் விலை குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எல்.ஐ.சி வாடிக்கையாளர்கள்
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை எல்ஐசி நிறுவனம் கொண்டிருந்த நிலையில் தற்போது அது 20% வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது என்பது ஒரு அதிர்ச்சியான தகவல் ஆகும். எல்ஐசி நிறுவனத்தின் லாபத்தை பொருத்தவரை 4 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தபோதிலும் மற்ற நிறுவனங்கள் எல்ஐசி நிறுவனத்தை விட அதிக லாபம் பெற்று வருவது எல்ஐசியின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அரசுக்கு நஷ்டமில்லை
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்கள் தற்போது நஷ்டத்தில் விற்றாலும் அரசுக்கு முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டும். அதேபோல் விற்ற பணத்தை கொண்டு வேறு ஒரு பங்கை வாங்கினாலும் அதற்கும் வரி செலுத்த வேண்டும். எனவே அரசைப் பொருத்தவரை எல்ஐசி ஐபிஓ பட்டியலிட்டதன் மூலம் வருமானத்தை பெற்றுள்ளது. ஆனால் நஷ்டம் என்பது முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான் என்பதே மிகப்பெரிய வருத்தமான விஷயம் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
பங்குச்சந்தையின் வளர்ச்சி
ஆனால் அதே நேரத்தில் எல்ஐசி பங்கு வெளியீட்டின் மூலம் சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்கு சந்தைக்கு வந்து இருக்கிறார்கள் என்றும், அவர்கள் அதனை கற்றுக்கொண்டு வெவ்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தால் பங்குச்சந்தை இன்னும் வளர்ச்சி அடையும் என்றும் பொருளாதார நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
What Economists says about LIC IPO?
What Economists says about LIC IPO? | எல்.ஐ.சி பங்குகள் உயர வாய்ப்பு உள்ளதா? என்ன சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்?