மும்பை: கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கடனுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக இருக்கும் நிலையில் நிதிக்கொள்கை கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டால் வட்டி விகிதம் 4.90 சதவீதமாக அதிகரிக்கும். கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் என்ற தகவலால் வங்கிகளில் வீடு, வாகனம், தனிநபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக அறிவித்தது. இதனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.