கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்குவது குறித்து ஆராய்வு – கடற்றொழில் அமைச்சர்

கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மற்றும் ஆழ்கடல் பலநாள் கலன்களுக்கான எரிபொருள் விநியோகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்ளுதல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று (07) கடற்றொழில் அமைச்சில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது பங்கதெனியவில் நக்டா நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை, கொடுவா உட்பட்ட கடலுணவுகளுக்கான குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் ஆலோசனைநடத்தி
பல்வேறு வழிவகைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

அம்பேகமுவ, கினிகெத்தன பிரதேசத்தில் நக்டா நிறுவனத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதன் மூலம், குறித்த பிரதேசத்தில் நீர்வேளாண்மை எனப்படும் நன்னீர் மற்றும் பருவகால கடலுணவு வளர்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பாக தனியார் முதலீட்டாளர்களுடன் கடற்றொழில் அமைசசர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தனியார் முதலீட்டாளர்கள், குறித்த பிரதேசத்தில் நக்டா நிறுவனத்தின் கிளை மையம் ஒன்றினை அமைப்பதன் மூலம், அந்தப் பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 3000 பேருக்கு தொழில் வாய்ப்பினை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.