புதுடெல்லி: காவல் துறையை நவீனப்படுத்தவும், போலீஸ் நிலையங்கள் அமைத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.126.7 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள போலீஸ் படைகளை நவீனப்படுத்துவதற்காகவும், புதிதாக போலீஸ் நிலையங்கள் அமைத்தல், போலீஸ் நிலையங்களை மேம்படுத்துதல், காவல் துறையினர் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துதல் போன்றவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு ரூ.22.59 கோடியும், ஜார்க்கண்டுக்கு ரூ.2.63 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.14.76 கோடியும் மகாராஷ்டிராவுக்கு ரூ.7.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஜார்க்கண்டுக்கு கூடுதலாக ரூ.8.39 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.1.61 கோடியும் தரப்பட்டுள்ளது. மேலும் காவல் படைகளை நவீனமயமாக்க ரூ.69.21 கோடி தரப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் அவர்களின் காவல் துறை அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நவீனப்படுத்தவும், போலீஸ் படைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு உதவி செய்வதாக அறிவித்துள்ளது.
காவல் படைகளின் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மாநிலங்களின் முயற்சிகள் மற்றும் வளங்களுக்கு மத்திய அரசு துணை புரிந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.