புதுடெல்லி: மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கூடாது என காவிரி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய தடுப்பணையை கட்ட கர்நாடக மாநில அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்டும் பட்சத்தில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதால் தமிழக அரசு அத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்கின் இறுதி உத்தரவு வரும் வரையில் மேகதாது குறித்து எந்த ஒரு விவாதமும் செய்யக் கூடாது என்று காவிரி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வரும் 17ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் 16வது கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஆணையத்தின் முன்னிலையில் கர்நாடக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த காவிரி ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் பதில் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘டெல்லியில் நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரானது. அதே நேரத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது. குறிப்பாக இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமே உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் இடையே முறையாக காவிரி நீர் பங்கீடு செய்வதற்கு மட்டுமே ஆகும். எனவே மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவோ விவாதிக்கவோ, உத்தரவு பிறப்பிக்கவோ கூடாது என காவிரி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.