வேலூர்: கடந்த 30 ஆண்டுகளாக ஆசை பாசங்களை இழந்து உள்ளோம். என பொது மன்னிப்பு வழங்கி தன்னை விடுவிக்க கோரி சிறைத்துறை மூலம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் சாந்தன். இந்நிலையில், வேலூர் மத்திய சிறைத்துறை மூலம் இவர் நேற்று தனது விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், குடும்பத்தை பிரிந்தும், ஆசாபாசங்களை மறந்தும் சிறை வாழ்க்கை வாழ்ந்து வருவதால் தனக்கு குடும்பத்தோடு இணைந்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பொது மன்னிப்பு வழங்கி தன்னை விடுக்க வேண்டும்” என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சாந்தன் ஆளுநருக்கு தனது விடுதலை தொடர்பாக கடிதம் எழுதுவது இது முதல்முறை கிடையாது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் தனது விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு சாந்தன் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட சாந்தன், வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.