கொச்சி: தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த ஒரு பார்சலை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இருந்த 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். அந்த பார்சலில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணைத் தூதரக முகவரிகுறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், யுஏஇ துணைத் தூதரகத்துக்கு உள்ள சட்ட பாதுகாப்பை பயன்படுத்தி தொடர்ந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனிடையே, அதே ஆண்டு ஜூலை 10-ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ) சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் யுஏஇ துணைத் தூதரக ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார், கேரள முதல்வரின் அப்போதைய முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் நேற்று முன்தினம் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து நீதிமன்றத்தில் ஏற்கெனவே 164 முறை தெரிவித்துள்ளேன். எனக்கு பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளேன். முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா, முதல்வரின் தனிச் செயலாளர் ரவீந்திரன் முன்னாள் தலைமைச் செயலாளர் நளினி நெட்டோ, முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோருக்கு இந்த வழக்கில் உள்ள தொடர்பு குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளேன்.
2016-ல் தொடங்கியது
கடந்த 2016-ல் முதல்வர் துபாய் சென்றிருந்தார். அப்போது அவரது முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர், என்னை தொடர்புகொண்டு, முதல்வர் ஒரு பையை மறந்து திருவனந்தபுரத்திலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். அதை உடனே துபாய்க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன்படி, யுஏஇ துணைத் தூதரக அதிகாரி உத்தரவின் பேரில், அதன் ஊழியர் ஒருவர் மூலம் அந்த பை துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பையை ஸ்கேன் செய்தபோது அதில் ரூபாய் நோட்டுகள் இருந்ததை புரிந்துகொள்ள முடிந்தது. அப்போதிருந்து தொடங்கியதுதான் இந்த கடத்தல்.
துணைத் தூதரக அதிகாரியின் வீட்டிலிருந்து முதல்வரின் வீட்டுக்கு அவ்வப்போது வாகனத்தில் அதிக எடை கொண்ட பிரியாணி பாத்திரம் அனுப்பி வைக்கப்படும். சிவசங்கரின் உத்தரவுப்படி இது நடக்கும். அந்த பாத்திரத்தில் பிரியாணி மட்டும் இல்லை. அதில் உலோகம் இருந்தது. இதுபோல பலமுறை நடந்துள்ளது. எல்லா விவரங்களையும் கூறிவிட்டேன். இதுகுறித்து நீதிமன்றமும் விசாரணை அமைப்புகளும் முறையாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தங்கக் கடத்தல் குறித்து பேட்டி அளித்த நிலையில், தனது நண்பர் சரித் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக ஸ்வப்னா நேற்று தெரிவித்தார்.
பினராயி விஜயன் மறுப்பு
ஸ்வப்னாவின் புகாரை கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தங்கக் கடத்தல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, ஒருங்கிணைந்த விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக எங்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்தப் புகாரில் உண்மை இல்லை. இதற்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் ஆதாயம் தேட முயற்சி செய்வோருக்கு கேரள மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறும்போது, ‘‘தங்கக் கடத்தலில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பதவியில் தொடர்வது ஜனநாயகத்துக்கு அவமானம். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் சிபிஐ விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.
இளைஞர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினர் நேற்று மாலை தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். அப்போது, முதல்வரின் உருவ பொம்மையை எரித்தனர். முதல்வர் பதவி விலகக் கோரி பாஜகவினரும் போராட்டம் நடத்தினர்.