தனது நகைச்சுவையின் மூலம் பலரையும் மனம் விட்டு சிரிக்க வைத்தவர் நடிகர் போண்டா மணி. சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது உடல்நிலை சரியாகி வீடு திரும்பியவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
ஒரு படப்பிடிப்பில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் வச்சிருந்தாங்க. அவங்களால சாக்கடை மாதிரி செட்டப் ரெடி பண்ண முடியல. செட்ல எல்லாரும் யோசிச்சிட்டு இருந்தாங்க. அந்த சீனை முடிச்சு கொடுக்கணும்ங்கிறதால நிஜ சாக்கடையிலேயே விழ வேண்டியதாகிடுச்சு. ரொம்ப நேரம் சாக்கடைக்குள் இருக்க வேண்டிய சூழல். அந்தக் காட்சி நடிச்சு முடிச்சப்போ நைட்ல இருந்து மூச்சுத்திணறல் இருந்துட்டே இருந்துச்சு. அதையும் பொருட்படுத்தாம கோவாவிற்கு ஒரு நிகழ்ச்சிக்காக போக வேண்டியிருந்ததுன்னு அங்க கிளம்பிட்டேன். தொடர்ந்து நிகழ்ச்சிக்காக மதுரை போயிருந்தேன். அங்க உடல்நிலை மோசமாகி மயக்கமாகிட்டேன். பிறகு அங்கிருந்து சென்னை வந்தேன். சென்னை வந்த பிறகு மூச்சு விடவே சிரமப்படும் அளவுக்கு உடல்நிலை மோசமாகிடுச்சு. கிரேன் மனோகருக்கு போன் பண்ணினேன். அவர் சொல்லித்தான் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு என் பையன் கூட்டிட்டு போனான்.
விஷயத்தைக் கேட்டவுடன் செல் முருகன் நேரடியா மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையில் அவருக்குத் தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் பேசினாரு. அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. 32 வருஷத்துல முதல் முறை அரசு மருத்துவமனைக்குப் போனேன். அங்கே என்னை ரொம்பவே நல்லா பார்த்துக்கிட்டாங்க. அரசு மருத்துவமனையில் இவ்வளவு நல்லா பார்த்துப்பாங்களான்னு அப்பதான் தெரிஞ்சது. அங்கப் போனதாலதான் உயிர் காப்பாற்றப்பட்டேன். பூச்சி முருகன், முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் எல்லாருக்கும் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஸ்டாலின் ஐயாவைச் சந்திக்க நேரம் கேட்டு வந்திருக்கேன். சீக்கிரம் அவரை நேரில் சந்தித்து என் நன்றியைச் சொல்லணும்.
என்னை யாரும் கண்டு கொள்ளவில்லைன்னு மீடியாவில் செய்தி போட்டுட்டாங்க. அதைப் பார்த்துட்டு மயில்சாமி ஓடிவந்து அப்படியெல்லாம் நீ சொல்லக்கூடாதுன்னு சொல்லி பணம் கொடுத்தார். அவருடன் சேர்ந்து பி. வாசு சாரும், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சரத்குமார் அவர்களும் எனக்காக பண உதவி செய்தாங்க. செல் முருகனை விவேக் சாருடன் பார்த்திருக்கேன். அப்ப கூட அவர் இந்த அளவு உதவும் எண்ணம் உள்ளவர் என்கிற விஷயம் எனக்கு தெரியாதுங்க. நேரடியா மருத்துவமனைக்கு வந்து எனக்காகப் பல உதவிகள் செய்தார். உடம்பு முடியாத சமயத்தில் தான் இன்னமும் என் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கிற நல்ல மனிதர்கள் இருக்காங்க என்கிற விஷயத்தை உணர்ந்தேன். அந்த சந்தோஷத்திலேயே சீக்கிரம் மீண்டு வந்துட்டேன்.
வடிவேலு குரூப்பில் நாங்க எல்லாரும் இருந்தோம். அவர் நடிக்காத காலகட்டத்தில் நாங்க எல்லாரும் வேலையில்லாம கஷ்டப்பட்டோம். அது எல்லாருக்கும் தெரிஞ்சது ஆனாலும் யாரும் எந்த உதவியும் பண்ணல. இப்ப யார் வேணும்னாலும் சினிமாவில் நடிக்கலாம்னு ஆகிப்போச்சு. முன்னாடியெல்லாம் சினிமாவுக்குள்ள வர்றதுக்குன்னு ஒரு மரியாதை இருந்துச்சு. அவ்வளவு சுலபமா நடிக்க வந்துட முடியாது. காசு இருக்கிறவன் கொடுத்து நடிக்கலாம் என்கிற மாதிரி இன்றைய சினிமா ஆகிடுச்சு. ஏதோ, சின்னத்திரை இருக்கிறதனால எங்களை மாதிரியான ஆட்களைக் கொஞ்சம் காப்பாத்துறாங்க. நான் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன். தயவு செய்து எல்லா ஹீரோக்களும் எங்களை திரும்பி பார்க்கணும். எல்லாரும் எங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும்! நாங்க தொடர்ந்து சினிமாவில் இருக்கணும். அதுக்கு இவங்க எல்லாருடைய ஒத்துழைப்பும் எங்களுக்கு வேணும்! நாங்க யாரையும் வெறுக்கல! எங்களுக்கு எல்லாரும் வேணும் என்றவர் சில நொடிகளுக்குப் பின் பேசத் தொடங்கினார்.
விஜய் சாருடைய பி.ஏ, ரஜினி சாருடைய பி.ஏ எல்லாரும் போன் பண்ணி உடல்நலம் குறித்து விசாரிச்சாங்க. அஜித் சாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவர் கூட ஒரு ஆறு படம் பண்ணிருக்கேன். விஜய் சாருடன் ஜில்லா படத்தில் நடிக்கும்போது என்கிட்ட தனியா ரொம்ப நேரம் பேசினார். ‘வின்னர்’ படத்தில் சுந்தர் சி சார் நான் வேண்டாம்னு சொன்னார்.
வடிவேல் சார் சொல்லி என் கெட்டப் மாற்றிய பிறகு தான் சுந்தர் சி சார் ஓகே சொன்னார். அப்படித்தான் அந்தப் படத்தில் நடிச்சேன். சுந்தர் சி சாருடைய படத்தில் எல்லாம் நாங்க எல்லாரும் ஒர்க் பண்ணியிருக்கோம். அவர் எங்களை இப்ப கண்டு கொள்ளவில்லைன்னு ரொம்பவே வருத்தமா இருக்கு.
வடிவேல் சாருக்குப் பிறகு கவுண்டமணி அண்ணன் ஸ்டைலில் சந்தானம் வந்தாரு. அவரை மக்கள் ஏத்துக்கிட்டாங்க. ஆனா, அவர் அவரைக் கெடுத்துக்கிட்டார். அவர்கிட்ட நேரடியாகவே நீங்க காமெடியனாக இருந்தா வேற இடத்துக்கு போயிருப்பீங்க. ஹீரோவானதால தான் இடையில் வாய்ப்பு இல்லைன்னு சொன்னேன். அதற்கு அவர் என்கிட்ட எனக்கு இதுல தான் ஆர்வம்.. முடிஞ்ச அளவுக்கு போராடுவோம்னு சொன்னார். சந்தானம் ஒரு நல்ல காமெடியன். அவர் காமெடியனாக இருந்தால் நிச்சயம் நல்ல இடத்திற்கு போவார்.
இனிமே சின்னத்திரையில் கவனம் செலுத்தலாம்னு இருக்கேன் என்றவர் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.