புதுடில்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள மித்தாலிராஜ் தனது 39 வயதில் அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 23 ஆண்டுகள் விளையாடிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்னும் சாதனைக்கு உரியவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அவர், தற்போது அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
‛பல ஆண்டுகளாக தனக்கு அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி’ என தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட மித்தாலி ராஜ், இதுவரை 232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7,805 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையும் இவர் வசமே உள்ளது. அதேபோல் 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 89 டுவென்டி-20 போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்துள்ளார்.
Advertisement