சென்னை: சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள சிதம்பரம் கோவிலில் ஆய்வு செய்ய அறநிலையத்துறை அமைத்த அதிகாரிகள் குழு இன்று 2வது நாளாக வருகை தந்துள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான கோவில்களை தனவசப்படுத்தி உள்ள அரசின் அறநிலையத்துறை சிதம்பரம் கோவிலையும் வசப்படுத்த முயற்சித்து வருகிறது. அங்கு அவ்வப்போது எழுந்துவரும் சர்ச்சைகளை காரணம் காட்டி, அதை அரசு வசப்படுத்த முயற்சித்து, அதற்கான குழுவையும் அமைத்து ஆய்வு செய்ய முயற்சித்து வருகிறது.
இதையடுத்து, நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை இந்து சமய அறநிலைத்துறை அனுப்பியது. அதில், கோவில் தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்கப்பட உள்ளதாகவும், அதனால், கோவில் வரவு செலவு கணக்கு மற்றும் சொத்து விவரங்களை அதிகாரிகள் குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலைத்துறை அமைத்த அதிகாரிகள் குழு ஆய்வு செய்வதற்கு நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு சென்றிருந்தது. இந்த குழுவில், இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள் நடராஜ், லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் இன்று நடராஜர் கோவிலுக்கு வந்து இருந்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் கணக்கு வழக்கு அடங்கிய விவரங்களை தர மறுத்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்ட உள்ளதால் ஒத்துழைக்க முடியாது என்று தெரிவித்தனர். இதையடுத்து திரும்பி சென்ற ஆய்வு குழுவினர், இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொள்ள கோவிலுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுவான கோயில் என்பது தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால், சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் ஒத்துழைப்பதுதான் மனு நீதி என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.