Chidambaram temple Dikshithars won’t give account details to HRCE committee: சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு- செலவு கணக்குகள் மற்றும் சொத்துக்கள் குறித்த தகவல்களை அரசு அமைத்த குழுவிடம் பொது தீட்சிதர்கள் தெரிவிக்க மறுத்ததால் பதற்றம் நிலவியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாக பணிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் (HR&CE) கடலூர் துணை ஆணையரும் சரிபார்ப்பு அதிகாரியுமான சி ஜோதி, கோவில் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் தணிக்கை அறிக்கைகள் குறித்த அனைத்து பதிவுகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அவற்றை ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கோயிலுக்கு ஆய்வு செய்ய வரும் குழு உறுப்பினர்களிடம் வழங்குமாறும் கடந்த மாதம் சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அதன்படி, கோயிலின் நிர்வாகப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) காலை கோயிலுக்குச் சென்றனர். இருப்பினும், பொது தீட்சிதர் சமூகம் குழு கேட்ட எந்த தகவலையும் தர மறுத்து விட்டது. எனவே, கோயிலின் நிர்வாகப் பணிகள் குறித்த விவரங்களைப் பெறுவதற்காக புதன்கிழமை (ஜூன் 8) மீண்டும் கோயிலுக்கு வருவதாக அறிவித்து குழு உறுப்பினர்கள் மாலையில் புறப்பட்டுச் சென்றனர்.
தீட்சிதர் சமூகத்தின் சார்பில் அதிகாரிகளிடம் பேசிய வழக்கறிஞர், இந்துசமய அறநிலையத்துறை அல்லது அதன் அதிகாரிகளுக்கு அவர்களாகவே கோயில் கணக்குகளை சரிபார்க்கவோ அல்லது மதகுருக்கள் நிர்வகிக்கப்படும் கோவிலில் விருப்பப்படி ஆய்வு செய்யவோ அதிகார வரம்பு இல்லை’ என்று கூறினார்.
பொது தீட்சிதர்களின் செயலாளர் ஜூன் 7 அன்று இந்து சமய அறநிலையத்துறை நோட்டீசுக்கு அளித்த விரிவான பதிலில், TN HR&CE சட்டம், 1959 இன் பிரிவு 107, அறநிலையத்துறையின் அதிகார வரம்பிலிருந்து கோயிலுக்கு விலக்கு அளிக்கிறது. மேலும் இது மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது, என்று கூறினார்.
மேலும், ”பொது தீட்சிதர்கள் சமூகம் ‘கோயில் சட்ட’ விதிகளின்படி அனைத்து கணக்குகளையும் மற்ற பதிவுகளையும் பராமரித்து வருகிறது. சரிபார்ப்பு மற்றும் தணிக்கையின் அதிகார வரம்பைக் கொண்ட சரியான முறையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். எனவே, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஆய்வு மற்றும் பதிவுகள் மற்றும் கணக்குகளுக்கான அதிகாரியின் நோட்டீஸைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று செயலாளர் கூறினார்.
ஆனால், இந்த கோவிலை ‘பொது தீட்சிதர்களின் நலனுக்காக நிறுவப்பட்டு பராமரிக்கப்படும் மதகுரு கோவில்’ என உச்சநீதிமன்றம் அறிவிக்கவில்லை என்றும், கோவிலின் மீது அறநிலையத்துறையின் அதிகார வரம்பையும் உச்ச நீதிமன்ற உத்தரவு கட்டுப்படுத்தவில்லை என்றும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: 3 நாட்களில் 33 லட்சம் வசூலித்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்.. தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்!
“சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோவில், பழைய அரசர்களால் நிறுவப்பட்ட பொதுக் கோவில். அதன் பராமரிப்புக்காக, பல ஏக்கர் சொத்துக்களை தானமாக அளித்துள்ளனர். கோவிலின் பொதுத் தன்மை, மாண்புமிகு நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் அறிவிக்கப்பட்டுள்ளது,” என இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் ஆர். கண்ணன், பொது தீட்சிதரின் செயலாளருக்கு அனுப்பிய நோட்டீஸில் கூறியுள்ளார்.
மேலும், “இந்து சமய அறநிலையத்துறையால் வெளியிடப்பட்ட நடவடிக்கைகள் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை மீறுவதாகவோ அல்லது கோவில் நிர்வாகத்தில் இருந்து பொது தீட்சிதர்களுக்கு தடையாகவோ இல்லை. பல்வேறு தீர்ப்புகளில் அருள்மிகு நடராஜர் கோவில் பொது கோவிலாக அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயில்ல் விவகாரங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க தகுதியுடையவர். சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஆணையர் மற்றும் அரசாணை பிறப்பித்த நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது குறித்த கேள்வி எழாது,” என்றும் ஆணையர் கண்ணன் கூறியுள்ளார்.