இலங்கைக்கு கிடைக்க உள்ள மருந்துப் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் முதல் கிடைக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கையிருப்பு உரிமையாளர்கள் ஊடாக மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற ஏராளமான செல்லப் பிராணிகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற தற்போதைய காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளால் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை நேரிடும். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்புடன் செயல்படுவது மிகவும் சிறந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.