(ஆனந்த விகடனில் 1972-ல் எம்.ஜி.ஆர். எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ கட்டுரையிலிருந்து)‘
மருதநாட்டு இளவரசி’ படத்தின்போதுதான் எனது மூன்றாவது மனைவியை (ஜானகியை) நான் மனைவியாக்கிக் கொள்ளும் உரிமை எனக்குக் கிடைத்தது. உள்ளத்தால் எனக்கு அந்த உரிமை தரப்படடது. ஆனால், சட்டப்படி அந்த உரிமையை நான் பெற இயலவில்லை எனினும், பல ஆண்டுகள் நாங்கள் கணவன்-மனைவியாகவே வாழ்ந்து வந்தோம். அண்மையில் சில ஆண்டுக்கு முன்புதான் அந்த உரிமையைப் பெற்றோம்…
நான் ஜானகியை மணந்து கொள்ளப் பிடிவாதமாக இருந்த நேரம், அதை எதிர்த்த ஜானகியின் உறவினர் (ஜானகிக்கு அப்போது கார்டியனாக இருந்தவர்) நான் ஜானகியை மணக்க விரும்பியதற்கு அப்போது அவளிடமிருந்த பணத்துக்கும், அவள் எதிர்காலத்தில் சினிமாவில் நடித்துச் சம்பாதிக்கப் போகிற பணத்துக்கும் வேண்டித்தானே தவிர, உண்மை அன்போ ஆசையோ எனக்கு இல்லை என்று நம்பினார் போலும், அதனால் ஒரு நிபந்தனை போடுவதற்காக என்னைப் பேச அழைத்திருந்தார்.
இப்போதென்றால் என்னால் முடிந்தவரையில் விவாதித்துப் பார்ப்பதுண்டு. அன்று எனக்கு அந்த அளவுக்குப் பொறுமை கிடையாது. நினைத்ததை, நான் நம்புவதைத் களங்கமின்றிச் சொல்வேன். அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது முடியாது என்று சொல்ல வேண்டும். அவர்கள் கூடாது, முடியாது, இல்லை என்று சொல்லுவதில் எனக்குக் கோபம் வராது. ஆனால், என்னுடைய நோக்கத்துக்கு மாசு கற்பித்துப் பேசினார்களானால், உடனே குமுறும் எரிமலை ஆகிவிடுவேன்.
அதனால் என்ன விளைவு ஏற்படும் என்கிறீர்களா? பிறகு ஒரு நிமிடம்கூட அந்த இடத்தில் என்னைப் பார்க்க முடியாது. ஆனால், நான் வெளியேறும்போது எனது சூளுரை மட்டும் அங்கு எதிரொலிக்காமல் இருக்காது. மைசூரில் ‘மருதநாட்டு இளவரசி’ படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதுதான் அந்த நிகழ்ச்சி நடந்தது.’காளிதாசி’ என்ற பெயரில் படம் ஆக்கப்படடபோது, கம்பெனியில் இருந்த ஒரு பெண்ணும் அதே மைசூரில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம் அன்பு கொண்டவராயிருந்தார். என்னோடு மனைவியாக வாழ்க்கை நடத்தவும், சட்டப்படி உரிமை பெற்று என்னோடு வாழவும் அவர் விரும்பினார்.
அப்போதே நான் மறுத்துவிட்டேன். ஆனாலும், நான் மீண்டும் மைசூர் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்ட நாட்களில் நான் வெளியே போகும்போது எப்போதாவது வீதியில் சந்திப்பதுண்டு. அவர் என்னை வீட்டுக்கு அழைக்காத நாள் கிடையாது. சில சமயம் தனது விருப்பத்தைக் கடிதமாக்கி, என் கண்களைக் கலங்கச் செய்யும்வகையில் அக்கடிதம் எனக்கு அனுப்பப்படும். எனது உள்ளத்தில் எந்த வேட்கையும் இல்லாதபோதே மறுத்தவன். இப்போதோ ஜானகியை மனைவியாக்கிக் கொள்ள விரும்பி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரம். இதை அவளும் எப்படியோ அறிந்திருந்தாள். ஒரு சில கடிதங்களில் எனக்கு ஜானகியின் உறவினர்களால் ஏற்படப்போகிற ஆபத்தைப் பற்றி எச்சரிக்கை செய்தும் எழுதப்பட்டிருக்கும்! தனது முகவரியைத் தெளிவாகத் தந்திருந்தார். நவஜோதி ஸ்டூடியோவுக்கு மிக அருகில் அவர் வசித்துக் கொண்டிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் நான் இருந்தபோதுதான், மாலை ஏழு மணிக்குமேல் என்னை வரும்படி ஜானகியின் கார்டியனைப் போலிருந்தவர் அழைத்திருந்தார். நான் பெருமகிழ்ச்சியோடு சென்றேன். நானும் அவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்தோம். அவர் ஒரு அக்ரிமெண்ட் போன்று டைப் செய்து வைத்திருந்த ஒன்றை எடுத்துப் படித்தார். குறிப்பாக, அதில் எழுதியிருந்தது இதுதான்:’ஜானகியை எனக்கு மணமுடித்து வைக்க அவர் சம்மதம் அளிக்கிறார், சில நிபந்தனைகளுக்குட்பட்டு. அவளை மணந்த பிறகும் அவள் தொடர்ந்து படத்தில் நடிக்க நான் சம்மதிக்க வேண்டும்.
நாங்கள் நடிக்கும் படங்களின் ஒப்பந்தங்கள், ஜானகியின் கார்டியனான உறவினரிடம்தான் செய்துகொள்ள வேண்டும்.”அதாவது, நாங்களிருவரும் ஏறத்தாழ பத்தாண்டுக்கு ஜானகியின் கார்டியனிடம் ஒப்பந்தம் செய்து கொள்கிறோம். அவர் எந்தெந்தப் படங்களில் எங்களைச் சேர்ந்தோ, தனியாகவோ நடிக்கச் சொல்கிறாரோ அவைகளில் நடிக்க வேண்டும். இதற்கு நான் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், ஜானகியை எனக்கு மணம் செய்து கொடுக்கத் தயார்.
முதன் முதலில் நான் ஜானகியை மணக்க விரும்புவதாக அவளிடம் சொன்னபோதே, ‘திருமணத்துக்குப் பிறகு நடிப்புத் தொழிலிலிருந்து விலகி விடவேண்டும்’ என்பதுதான். அவள் எனக்குச் சொன்னதும், ‘கல்யாணத்துக்குப் பிறகு நடிப்புத் தொழிலில் இருக்கமாட்டேன். கூடையிலே மண் சுமந்து வேலை செய்யவும் தயார். ஆனால், நடிக்கமாட்டேன்’ என்பதுதான்.
நடிப்புத் தொழில் இழிவானது என்று அவள் ஒருபோதும் கருதியதில்லை. ஆனால், அவளுக்கு நடிப்பதில் சிறிதும் விருப்பம் இருக்கவில்லை. மணந்து கொண்டு வீட்டில் குடும்பத் தலைவியாக மட்டும் இருந்து, தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பதே அவளது விருப்பம்.
கார்டியனைப் போலிருந்தவரின் நாற்காலிக்குப் பின்னால் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானகி.
அவர் படித்த நிபந்தனைகளைக் கேட்டதும், ஆத்திரத்தின் எல்லைக்கே போய்விட்டேன் என்பதே உண்மை. அவரை முறைத்துப் பார்த்தேன்.”அடிமை வியாபாரியாகலாம்னு நிக்னக்கிறீங்களா?” என்றேன்.
நான் கடுமையாகக் கேட்பதைக் கவனித்த ஜானகி, கண்ணில் நீர் நிரம்ப சைகை செய்தாள் ‘பேச வேண்டாம்’ என்று. அதைக் கண்டதும் எனக்கு மேலும் கோபம் அதிகமாயிற்று. அதற்குள் கார்டியன் சொன்னார்: “ஜானகியோட பணத்துக்கு நீங்க ஆசைப்படலேன்னா இந்த ஒப்பந்தத்துலே கையெழுத்துப் போட்டா என்ன..? அவளை உங்க இஷ்டத்துக்குப் பயன்படுத்தி, அவ சம்பாதிக்கிறதை நீங்க அனுபவிக்கலாம்னு நினைச்சிங்கன்னா, அதுக்கு நான் எப்படிச் சம்மதிக்க முடியும்…?”
“ஜானகியை நடிக்க வைப்பதில்லை என்று எழுதித் தருகிறேன். நான் அவளுடைய பணத்தில் வாழவிரும்புகிறேன் என்று நீங்கள் நினைப்பது தவறு என்று இப்போதாவது புரிந்து கொள்வீர்களா?” என்றேன்.
அவர் சிகரெட்டை உறிஞ்சிப் புகையை விட்டவாறு மிகச் சாதாரணமான நிலையில் பதட்டமோ தடுமாற்றமோ இன்றி, முதலிலேயே பதில் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது போல் நிதானமாகச் சொன்னார்:”உங்களுடைய குடும்பமோ பெரிது. நோயில் படுத்திருக்கும் மனைவி, தாயார், அண்ணனின் குடும்பம். இவளுக்கும் தம்பி, தனயன், நான் போன்ற குடும்பம்! உங்கள் சம்பளம் எப்படிப் போதும்? இவளுடைய சம்பளத்தில் பாதியைத்தானே இப்போது நீங்கள் பெறுகிறீர்கள்! இன்னமும் முதல்தாரக் கதாநாயகன் நிலையை நீங்கள் அடைந்து விடவில்லையே! நீங்கள் உங்கள் குடும்பத்தையும், இவளுடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டுமாயின், இவள் சம்பாதிக்க வேண்டும். ஒருவேளை, அப்போது நீங்கள் இப்போதிருப்பதைவிட வசதியாக வாழலாம். ஆனால், இவளுடைய சம்பாத்தியத்தை இவளுடைய குடும்பத்துக்குத்தான் பயன்படுத்த அனுமதிப்பேனே தவிர, இவள் உழைத்துச் சம்பாதிக்க வேறு யாரோ வாழ நான் அனுமதிக்கமாட்டேன்…”
அவள் பின்னாலிருந்து சைகை காட்டினாள், ‘சரின்னு சொல்லுங்க… நாளைக்கு நாம் பேசுவோம்…’ என்று.
எனக்கு அவள் மீதும் ஆத்திரம் வந்தது. ஒரு பெண்ணின் பணத்தைக் கவருவதற்காகவும், அவள் சம்பாதிக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தவும் விரும்பும் ஒரு கேவலப் பிறவியாக என்னைப் பற்றி என்னிடமே கூறுகிறார். அதை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் என்னைச் சம்மதிக்கச் சொல்கிறாளே! அவளுக்கும் என் மானத்தைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லையே! அவள் என்னைவிட அதிகம் சம்பளம் வாங்குகிறாள் என்ற ஒரே காரணம்தானே இப்படியெல்லாம் அவளுடைய கார்டியன் சொல்வதற்கும், இவள் என்னைச் சமாதானம் செய்து அவருக்குப் பதிலேதும் சொல்லாமலிருப்பதற்கும்! எனக்கு வேறு பெண்ணே கிடைக்கமாட்டாளா? பார்ப்போம்! அவளைவிட நான் அதிகம் பணம் வாங்குவதாக எண்ணும் ஒருத்தியை அடைந்து, இவர்கள் கண் முன்பாகவே என் மானத்தைக் காத்து இவளை அவமானப்படுத்தாவிட்டால், நான் ராமச்சந்திரனல்ல!
கல்யாணத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்து தேதியைக் குறிக்கலாமென்று சொல்லி என்னை வரச் செய்து, நிபந்தனை போட்டு என்னை அடிமைச் சாசனத்திலல்லவா கையெழுத்துப் போடச் சொல்கிறார்! நான் ஜானகி மீது கொண்டிருக்கும் ஆசையை, அன்பைப் பயன்படுத்தி என்னை அவர்களுடைய கைப்பாவையாக அல்லவா ஆக்கப் பார்க்கிறார்கள்!திருமணத்துக்குப் பிறகு ‘நடிப்பதில்லை’, ‘நடிக்கக்கூடாது’ என்று எங்கள் இருவர் எண்ணத்துக்கும் எதிராக அல்லவா ஒப்பந்தம் கட்டளை இடுகிறது! அவள், நான் நடிக்காத படத்தில் நடிப்பாளாம்; என்னோடும் நடிப்பாளாம். இதற்கெல்லாம் எங்களிருவருக்கும் மாதா மாதம் அந்த கார்டியன் சம்பளம் கொடுப்பாராம். இப்படியொரு மனைவி தேவையா? சே! என்ன கல்யாணம் வேண்டிக்கிடக்கு!
இவ்வளவுதான் சிந்தித்திருப்பேன். ‘என்னையும் நிபந்தனை போடாமல் மனிதனாக மதித்து, என்னோடு வாழ விரும்புகிறவள் கிடைக்கிறாளா இல்லையா என்று பார்க்கிறேன்.’ – இதை வெளிப்படையாகச் சொன்னேனா இல்லையா, எனக்குத் தெரியாது! சொன்னது போன்ற உணர்வு. வேகமாக எழுந்தேன். ‘நான் கணவனாக விரும்பினேனே தவிர, அடிமையாக விரும்பிவரலே! வர்றேன்” என்று உரக்கக் கத்தினேன். இன்னும் என்னென்னவோ சொன்னேன். ஆனால், அவர் வெற்றிப் புன்னகையோடு அமைதியாக சிகரெட் புகையை ஊதிவிட்டவாறு நாற்காலியிலேயே அமர்ந்திருந்தார். நான் வேகமாக அறையை விட்டு வெளியே வந்தேன். அவளும் வெளியே ஓடிவந்தாள். “கொஞ்சம் பொறுமையாயிருங்க. நான் அவர்கிட்ட பேசி எப்படியாவது சம்மதிக்கச் சொல்றேன்… நாலுபேர் கேட்டா, அவர் சொல்றது நியாயம்னுதானே சொல்லுவாங்க. சம்மதிச்சுடுங்க… கையெழுத்துப் போட்டா என்ன? நான் நடிச்சாத்தானே… பார்ப்போமே! ஒப்பந்தம் செஞ்சுக்கலாம்… சரின்னு சொல்லிட்டுப் போங்க..” – அவள் கெஞ்சினாள் கண்கலங்க. எனது கண்களிலோ ரத்தம் கசிந்த உணர்வு – அவளுடைய பணத்தில், என் குடும்பத்தோடு சேர்ந்து சுக வாழ்வு வாழ விரும்புகிறவன் என்று அவர் சொல்லுவதை எழுத்து வாயிலாகச் சம்மதிக்கச் சொல்கிறாள் இவளும். அதற்குச் சாதகமாக என்னச் சம்மதிக்கச் சொல்கிறாளே! இவள் என்னைவிட அதிகச் சம்பளம் வாங்குகிறாள்! என்னைவிடப் புகழ் பெற்றிருக்கிறாள்! நான் இவளைத் தேடி ஓடி வருகிறேன். இவர்கள் கட்டளைப்படி. இவைகளாலல்லவா எனக்கிந்த நிலை… இருக்கட்டும்….
அவளிடம் சொன்னேன்: “அவர் கூப்பிட்டபோது ஓடி வந்தேன், அதுக்கு என்னைச் சொல்லணும்… பார்ப்போம். என் பணத்தையோ புகழையோ கவனிக்காம, என் உள்ளத்தையும் என்னையும் மட்டும் மதிச்சு என்னோடு வாழ்க்கைத் துணைவியாக வாழ்கிற ஒரு பெண் கிடைக்கிறாளா இல்லையானு பார்க்கிறேன்…” என்று சொல்லியவாறு படபடவென்று படிகளில் இறங்கினேன். என்னோடு வந்த நண்பர் கீழே காத்திருந்தார். அவர் என்னுடைய வேகத்தையும், முகத்தில் தோன்றிய வேதனையையும் கண்டு, “கொஞ்சம் பொறுங்க. பூட்ஸைப் போட்டுக்குங்க… வேட்டியைச் சரியா தூக்கிக் கட்டுங்க…. நிதானமாப் போவோம். கால் இடறப் போவுது…” என்று சொல்லியவாறு ஒன்றிரண்டு நிமிடங்கள் தாமதப்படுத்தினார். ஆயினும், என் உள்ளக் கொதிப்பு மேலும் அதிகமாயிற்று.
உண்மையில் நான்தான் பெரிது என எண்ணியிருத்தால், அவள் இந்நேரம் கீழே வந்திருக்க வேண்டாமா? ஒரு முறை மாடிப்படியைப் பார்த்துவிட்டு, நண்பருடன் தெருவில் நடக்கத் தொடங்கினேன்.
கம்பெனி வீட்டுக்குப் போகும் பாதையில் திரும்பாது நேரே சென்று கொண்டிருந்தேன். நண்பர், “கம்பெனி வீட்டுக்குப் பாதை இப்படிங்க…” என்றார், “தெரியும், இஷ்டமிருந்தா என்கூட வாங்க… இல்லேன்னா, நீங்களும் போகலாம்….” என்றேன். அதாவது, என்னோடு தொடர்ந்து வரவேண்டியவர்கள வர மறுத்துவிட்டார்கள். நீங்கள் மட்டும் என்ன. போங்களேன். இப்படி எண்ணம்…
அந்த நண்பர் ஏதும் சொல்லாமல் உடன் வந்தார். ரயில்வே கதவைத் தாண்டிச் சென்றேன். சிறு தூறல் போடத் துவங்கியது வானம். நண்பர் சொன்னார்: “மழைத் தூற்றல் விழுது… உடம்புக்கு ஏதாவது வந்தா தொல்லை… வாங்க..” என்று. “அங்கேதான் ரெண்டு பேருமாச் சேர்ந்து தூற்றி அனுப்பிட்டாங்களே… அதைவிட இது ஒண்ணும் என்ன செஞ்சுடப் போறதில்லே! நான் அடிமையாகணுமாம். சுருக்கமா சொன்னா. சினிமாவிலே சொல்லுவாங்களே ‘கூஜா’ என்று… அது மாதிரிதான் இருக்கணுமாம்… இந்த உலகத்துல எனக்கு கிடைக்காதுன்னு நினைச்சுட்டா… நான் விரும்பினேன். கல்யாணம் செஞ்சுக்கிறதுக்கு! ஆனா, சே… சே..!” என்றேன்.
எப்போது தூங்கினேன் என்று சொல்ல இயலாது. விழித்தேன். எனக்கு முன் ஒரு கடிதத்தை நீட்டியவாறு வேலைக்காரப் பையன் நின்றிருந்தான். “யாருடைய கடிதம்…?” என்றேன்.“ஜானகியம்மா கொடுத்தாங்க…”
“கார்டியன் இருந்தாரா..?”’அவரும் அருகில் இருந்தார்… அவருக்கும் தெரியும்….” என்று சொன்னான்!
அவசரமாகப் பிரித்தேன்.
ஜானகி தனது கார்டியனைப் போன்றவரிடம் விவாதித்துப் புதியதொரு முடிவுக்கு அவரும் சம்மதித்து விட்டதாக எழுதியிருந்தாள். “‘மருதநாட்டு இளவரசி’ படம் இரண்டொரு மாதங்களில் முடிந்துவிடும். அப்படி ஒருவேளை முடியாவிட்டாலும் இன்னும் மூன்று மாதங்கட்கு இந்தக் கல்யாண விஷயத்தைப் பற்றி தாங்கள் இருவரும் பேசவே கூடாது. மூன்று மாதங்களுக்குப் பின்னும் நாங்களிருவரும் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினால் தடையேதும் சொல்லுவதில்லை” என்று உறுதி கூறிவிட்டாரர்ம். அந்த மூன்று மாத காலம் திருமணப் பேச்சே பேசக்கூடாதென்ற அவருடைய நிபந்தனைக்கு இவளும் எதிர் நிபந்தனை போட்டிருக்கிறாள். அதையும் அவர் ஏற்றுக் கொண்டு விட்டிருக்கிறார்… அதாவது, அந்த மூன்று மாதங்கட்கு இடையில் புதிய எந்தப் படங்களிலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது. இதை அவர் ஏற்றுக் கொண்டதுதான், மூன்று மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்ய அனுமதிப்பார் என்ற நம்பிக்கையை எனக்கும் உண்டாக்கிற்று. மனிதன் எந்த அளவுக்கு அற்பசந்தோஷமாக இருக்கிறான் என்பதற்கு அப்போது நானே ஓர் உதாரணமாக இருந்தேன். எனது நண்பரை அழைத்து அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டினேன். பாவம், இதையெல்லாம் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதிலும் எனக்குக் கொஞ்சம் மனக்குறைதான். ‘நேற்று மட்டும் பெரிய தத்துவவாதி போல் உபதேசம் செய்தார். இப்போதோ இதில் சிறிதும் அக்கறை கொள்ளவே மாட்டேன் என்கிறாரே!’ என்று… “தமையனாரிடம் ஏதும் சொல்ல வேண்டாம், மைசூரில் தங்கியிருந்த பெண்ணின் பெற்றோருக்கு ஏதும் சொல்லி அனுப்பச் செய்ய வேண்டாம்” என்று சொன்னேன் என் நண்பரிடம். அவர் சிரித்தவாறே சொன்னார்: “சார்! (அவர் என்னை இப்போதும் அப்படித்தான் அழைப்பார் பெரும்பாலும்) சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க! நேற்றைக்கு நான் உங்களோடு வந்தேனே, எப்படி..? உங்க அண்ணன்தான் அனுப்பினார். “ராமச்சந்திரன்கூடப் போங்காணும், அவன் ஆத்திரப்பட்டு ஏதாவது ‘செஞ்சிடாம அவனைச் சமாதானப்படுத்திக் கூட்டிக்கிட்டு வாரும்… கார்டியன் தப்பா ஏதாவது பேசி இவன் ஏதாவது முரட்டுத்தனமா நடந்துட்டான்னா நல்லாருக்காது. போங்காணும்… அப்படீன்னா சொல்லித்தான் என்ன உங்களோட அனுப்பி வெச்சாரு…” பேயறைந்தவன் எப்படியிருப்பான் என்று எனக்குத் தெரியாது. நண்பர் சொன்ன சேதியைக் கேட்டு நான் இருந்த நிலையைப் பார்ப்பவர்கள் ஒருவேளை என்னை அதற்கு உதாரணமாகக் கொள்ள முடிந்திருக்கலாம்.
நான் யாருக்கும் தெரியாமல் சந்திக்கப் போனதாக எண்ணியிருக்க, என் தமையனாருக்கு மட்டும் எப்படித் தெரிந்திருந்தது? இது பற்றி யோசிப்பதைவிட முதல் நாளிரவு ஒரு பெண்ணின் வீட்டுக்குக் கல்யாணத்தைப் பற்றிப் பேசப் போக முயன்றேனே. அதுவும் தெரிந்திருக்குமோ… சே… சே..! தமையனார் என் முன்னால் நிற்பது போலவும், நான் அவரை நேரிட்டுப் பார்க்கும் வலிவை இழந்து வெட்கத்தால் குன்றிப் போய்த் தலை குனிந்திருப்பதைப் போலவும் ஒரு பிரமை…
சிறிது நேரத்தில் தெளிவு பெற்றேன். தமையனாருக்கு வேறு எதுவும் தெரியாதென்று நண்பர் சொன்ன பிறகுதான் மனம் அமைதி பெற்றது. திருமணம் நடந்துவிட்டது போலவும் எல்லோரும் எங்களை வாழ்த்துவது போலவும் மனம் நிரம்பிய பூரிப்புடன் எனது வேலைகளைச் செய்ய முற்பட்டேன். நடிக நடிகையர்கள், இயக்குநர் போன்ற அத்துணை பேரையும் பார்க்கும்போது நான் ஏதோ ஒரு பெரிய சாதனையைச் செய்து பெருமை பெற்றவன் போன்ற நிலையில் புத்துணர்ச்சியோடு செயல்பட்டேன். ஒவ்வொரு மனிதனும் தன் அறிவும் தனது வலிவும்தான் உயர்ந்தவை என்று பெரும்பாலும் நம்பி விடுகின்றானே தவிர, தன்னைவிட ஆற்றல் பெற்றவர்கள் இருப்பார்கள் என்பதை ஏனோ பல நேரங்களில் உணருவதில்லை. இல்லை; இல்லை… உணர மறுக்கும் நிலைக்கு அவனுடைய அவசரமும் அறியாத்தனமும் ஆளாக்கி விடுகின்றன.
இந்த அறிவின்மை என்னை மட்டும் விட்டுவிடுமா? படப்பிடிப்புகளில் அந்த கார்டியனைச் சந்திக்கும் போதெல்லாம் நான் அவரை வென்றுவிட்டது போன்ற நிலையில்தான் பார்ப்பேன். ஆனால், அவரோ இப்படிப்பட்ட ஏதும் நடந்தது போன்றே, பிரச்னைகள் தொல்லை தந்தன என்றோ அவருடைய செயலில் யாரும் கருதிவிட முடியாதவாறு நடந்து கொண்டார்.
எப்போதும் போல் சிகரெட்டுடன் வருவார். நிமிர்ந்த நடையோடு அங்குமிங்கும் செல்லுவார். குறிப்பிட்ட பொறுப்புக்களில் இருப்பவரிடம் மட்டும் வழக்கம் போல் ஒன்றிரண்டு வார்த்தைகளே பேசுவார்… போவார். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. நான் இதைப் பற்றி யாரிடமும் பேசவில்லையெனினும் ஒரு நாள் எதிர்பாராமல் ஒரு சேதி என்னப் படுபாதாளத்துக்குத் தள்ளிவிட்டது போன்று கிடைத்தது.
பலதாரத் தடைச்சட்டம் ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கு இடையில் தமிழகத்தில் சட்டமாக்கப்படப்போகிறது என்ற சேதிதான் அது.
நானோ மணமானவன். மனைவி நோய்வாய்ப்பட்டிருப்பினும் உயிரோடு இருக்கிறாள். இருக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமும் ஆகும். சதானந்தவதி உயிரோடு இருக்கும்போது ஜானகியை எப்படி மணம் செய்து கொள்ள இயலும்! மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் திருமணம் என்று ஜானகியிடம் அவர் சொன்னது இந்தத் தடைச் சட்டம் வரும் என்று தெரிந்த பிறகா அல்லது இது எதிர்பாராத நிகழ்ச்சியா? என்னால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தேன்.
இந்த ஆபத்தான நிலையை ஜானகிக்கு அறிவிக்க வேண்டுமே! நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிபந்தனேகளில் இந்தப் படம் முடியும் வரை நாங்கள் இருவரும் பாத்திரங்களில் நடிக்கும்போதுகூட, அதற்குரிய பேச்சுக்களைத் தவிர சொந்தப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதில்லை என்பதும் ஒன்றாகும். ஜானகி தனது பாதுகாப்பில் இருக்கும்போது அவள் ஒரு தனி நபருடன் காதல் உறவு கொண்டு பேசுவதும், தான் அதை அறிந்த பிறகும் அதைத் தடுக்காது அவளுக்குத்துணை வருவதும தனது தன்மானத்துக்குப பெரிய இழுக்காகும் என்று அந்த கார்டியனைப் போன்றவர் எண்ணி, அதை அவளிடமே சொல்லி, “என்னைத் தலைகுனிய வைக்கிறாயே! நான் உனது மானத்துக்குப் பாதுகாப்புத் தரவேண்டியவன்.
ஆனால், உனது மானத்தை நீ இழந்துவிட்டதாகப் பலர் பேசும் சூழ்நிலையை உருவாக்கி, அதற்குக் காவல் நான் இருக்கிறேன் என்று என்னையும் கேலி பேச வழி வைக்கிறாயே’ என்று வேதனையோடு கேட்டாராம். எந்தச் சுயநலத்துக்காகவும் தவறான காரியத்துக்காகவும் தான் என்னிடம் பழகவில்லை என்றும், கல்யாணம் ஆவதற்கு முன் எந்த உடல் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்றும் ஜானகி சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி மேலே குறிப்பிட்ட உறுதியை அளித்திருக்கிறாள். இரண்டொரு முறை இதைச் சொல்ல நான் முயன்றபோதும் கார்டியனுக்குத் தான் சத்தியம் செய்திருப்பதைச் சொன்னதோடு வேறு எதையும் தானும் சொல்லாமல் என்னையும் சொல்ல அனுமதிக்காமல் நிறுத்திக் கொண்டுவிட்டாள்.
எனக்கோ பல தாரத் தடைச் சட்டத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளோ சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன் என்று பேச மறுக்கிறாள். ஆனால், வேலைக்காரப் பையன், நான் சாப்பிட்டுவிட்டேன் என்று சொன்ன பிறகே அவள் சாப்பிடுகிறாள் என்கிறான். அவள் என்னை விரும்பவில்லை என்றால் அது வேறு.
ஆனால், அவள் என் மீது அக்கறை காண்பிப்பதை ஒவ்வொரு நாளும் அறிகிறேன். புதன், சனிக்கிழமைகளில் காலையிலேயே அவளுக்கு காபிப் பலகாரம் கொண்டு போகும் பையனிடம் என்னிடம் சொல்லச் சொல்லி அனுப்புவாள், ‘எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல் என்று. மூன்று மாதங்கட்குப் பின் அவள் என்னிடம் கொள்ளப் போகும் மனைவி என்ற உரிமையை எண்ணி நாங்கள் இருவரும் எங்கோ பிரிந்து இருந்தாலும் அவள் தனது கடமையை முடிந்த அளவுக்குச் செய்து கொண்டிருந்தாள்.
அவள் இப்படியிருக்க, அவளைச் சட்டப்படி மனைவியாக்கிக் கொள்ளவே முடியாத நிலையில் நான் இருக்கப் போகிறேன் என்பதை அவளுக்கு எப்படிச் சொல்லாமல் இருப்பது.! ஒரே வழி. கடிதம் எழுதினேன். அதை அவள் முதலில் வாங்க மறுத்தாளாம். பையனிடம் நான் சொல்லி அனுப்பியிருந்ததால் அவன் பிடிவாதமாகக் கொடுத்துவிட்டான். அவள் வேறு வழியின்றி அதை வாங்கிக் கொண்டாள். ஆயினும், தனது கார்டியன் போன்றவர் வந்ததும் அவரிடம் கடிதம் வந்திருப்பதைச் சொல்ல, அவர் படிக்கச் சொல்லியிருக்கிறார்.
ஜானகி அதைப் படித்ததும் அவர் திகைத்தவாறு ஏதும் பேசாதிருந்திருக்கிறார், அவள் அவரிடமே கேட்டிருக்கிறாள், “பல தாரத் தடைச் சட்டம் இரண்டொரு மாதங்களில் வரப் போகின்றதாமே, அது உங்களுக்குத் தெரியுமா?” என்று… அவர் தனக்குத் தெரியவே தெரியாது என்று சொல்லிவிட்டார். என்ன செய்வதென்று தெரியவில்லை அவருக்கு…எனக்குக் கடிதம் வந்தது. “இனி ஏதாவது சொல்ல வேண்டுமாயின் நேரில் சொல்லலாம். உடனே இதற்கு ஏதாவது வழி செய்யுங்கள். திருமணம் சட்டப்படி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யாராவது பெரிய வக்கீலைப் பாருங்கள்” என்றும் எழுதியிருந்தார்.
எனக்கு மைசூரில் தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த திரு. கிருஷ்ணய்யங்கார் என்ற நண்பரிடம் யோசனை கேட்டேன். அவர் ஒரு பெரிய வக்கீலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த திரு. கிருஷ்ணய்யங்கார் அவர்களை எனக்குச் சுமார் பத்து வயதிலிருந்தே தெரியும்.
அப்போது அவருடைய உதவியை நாடிச்சந்தித்தேன். அவருக்கு இருந்த பல வேலைகளுக்கிடையில் எனது பிரச்னைகளையும் உணர்ந்து அனுபவமிக்க நாணயமான கண்ணியம் மிகுந்த வயது முதிர்ந்த, வயதிலும் பழுத்து அறிவிலும் பழுத்த ஒரு வழக்குரைஞரை அறிமுகப்படுத்தினார். அந்த வக்கீல் எனது நிலைமையை உணர்ந்து உடனே ஜானகியிடம் சொல்லச் சொன்னார், தனக்குத் தெரிவித்துத் தனது சம்மதம் பெறாமல் எந்தக் கடிதங்களிலும் கையெழுத்துப் போடக்கூடாதென்று. அதையும் கடிதத்தில் எழுதி அனுப்பினேன். அவளுடைய பதிலும் வந்தது – ‘முன்னமேயே பல கையெழுத்துக்கள் சமீப நாட்களில் வாங்கியிருக்கிறார், அதை என்ன செய்வது?’ என்று. வக்கீலிடம் சொன்னேன். அவர் சிரித்தார். “ஜானகிக்கு ஆங்கிலம் தெரியுமா?” என்று கேட்டார். தெரியாது என்றேன். ‘அப்படியானால் பயப்படத் தேவையில்லை. இனிமேல் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்” என்றார்.
அதன்பின், சில நாட்களுக்கு பின் வந்த கடிதம், என்னை மேலும் திடுக்கிட வைத்தது. ஜானகியை பலவந்தமாக என் பாதுகாப்பில் வைத்திருப்பதாக, போலீசில் புகார் கொடுக்கப் பட்டிருப்பதாகவும், என்னை கைது செய்ய, ‘வாரன்ட்’ வாங்க ஏற்பாடுகள் நடைபெறு வதாகவும், அக்கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது.
திருமணமாகிய ஒரு பெண்ணை, நான் அபகரித்து, என் பாதுகாப்பில் வைத்திருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, என்னை கைது செய்து, வழக்கு போடச் செய்யவும், மருத நாட்டு இளவரசி படப்பிடிப்பை நிறுத்தி விடவும் முயலுவதாக அறிந்தேன்.
அப்போது, பணத்தின் பலமோ, பெரிய அதிகாரிகளின் சிபாரிசோ, புகழின் பாதுகாப்போ எதுவும் அற்ற நிலையில் இருந்தேன்.
இருப்பினும், அத்தனை சோதனைகளையும் கடந்து, என் மனைவி சதானந்தவதியின் அனுமதியுடனும், குடும்பத்தினரின் ஆசியுடனும், நல்ல நண்பர்களின் உதவியுடனும், ஜானகியை என்னுடையவளாக்கிக் கொண்டேன்.
– எம்.ஜி.ஆர்
(20.01.1988, 27.01.1988 ஆகிய தேதிகளில் வெளிவந்த ஜூனியர் விகடன் இதழ்களிலிருந்து..)