ஜி ஸ்கொயர் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 5ம் தேதி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இதற்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.
அண்ணாமலை அளித்துள்ள குற்றச்சாட்டின் விவரம் பின்வருமாறு : “வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் மீது நாங்கள் குற்றச்சாட்டை வைக்கின்றோம். கண்ணை மூடிக்கொண்டு கடந்த ஒரு வருட காலமாக இருந்து வருகிறார்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஜி ஸ்கொயர் என்ற ஒரு கம்பெனிக்கு மட்டும் சார்பாக எப்படி நடந்து கொள்ள முடியும். எந்த ஒரு நிறுவனத்துக்கும் கடந்த ஒரு வருடத்தில் இந்த சார்பு நிலை இருக்கவில்லை. இதற்கு அமைச்சர் மட்டும் தான் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதில் ஜி ஸ்கொயர் கம்பெனியின் ஓனர் யார். அவர்களுக்கும் எந்த குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. புதிதாக ஆறு கம்பெனிகள் டைரக்டர் 1 , டைரக்டர் 2 யார்? வேறு வேறு பெயர்கள் சொன்னாலும் கூட., இதில் எங்களை பொருத்தவரை நேரடிப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டியது அமைச்சர் முத்துசாமி அவர்கள் தான்” என்று அண்ணாமலை இந்த குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தார்.
இதற்கு இன்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் பதிலளிக்கையில், “அண்ணாமலை குற்றச்சாட்டில் சிவ மாணிக்கம் என்ற பெயரில் விண்ணப்பம் செய்து உள்ளனர். அவர் 12 .12 .2019 ஆம் ஆண்டு விண்ணப்பம் அளித்து இருக்கிறார்.
அந்த நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்தது 28 .1 .2021 அன்றைய தினம் அனுமதி கிடைத்துள்ளது. நாங்கள் ஏதோ நேற்று விண்ணப்பம் வாங்கி, இன்று அனுமதி கொடுத்தது போல் இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில், ஜீ ஸ்கொயர் நேரடியாக விண்ணப்பிக்கவில்லை. இதைத்தான் ஜீ ஸ்கொயருடன் சம்பந்தப்படுத்தி அவர் பேசி உள்ளார். நிலம் அனுமதிக்கு பிறகு கூட ஜீ ஸ்கொயர் அதை வாங்கி இருக்கலாம். எனவே அண்ணாமலை சொல்லி இருப்பது முழுக்க முழுக்க தவறு” என்று தெரிவித்துள்ளார்.