ஜேர்மன் தலைநகர் பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனத்தை மோதவிட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
மத்திய பெர்லினில் சில்வர் நிற ரெனால்ட் கிளியோ கார் ஒன்று நடைபாதை மீது பாய்ந்து, டசின் கணக்கான மக்கள் மீது மோதியதுடன் பல்பொருள் அங்காடி ஒன்றில் புகுந்து நின்றது.
இச்சம்பவத்தில், பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், அவர் ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், கோர விபத்தை ஏற்படுத்திய சாரதி 29 வயது கோர் எச் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் கொல்லப்பட்ட ஆசிரியர் 24 மாணவர்களுடன் அந்த பகுதியில் கடந்து சென்றுள்ள நிலையில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதில் காயம்பட்டவர்களில் 11 பேர்கள் மாணவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.
காயமடைந்த மாணவர்களுடன் குழுவில் இருந்த மற்றொரு ஆசிரியரும் பலத்த காயமடைந்தார், மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் இடுப்பு உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பெர்லினின் முக்கிய வணிக மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது 30 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், நகரின் மிருகக்காட்சிசாலைக்கு அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கைசர்-வில்ஹெல்ம் தேவாலயத்திற்கு வெளியே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
பெர்லினில் வசிக்கும் 29 வயதான ஜேர்மானிய-ஆர்மேனிய நபர் விபத்தை ஏற்படுத்திய அந்த சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, விசாரணையின் போது அந்த நபர் பொலிசாரிடம் என்ன தெரிவித்தார் என்பது தொடர்பில் தகவல் வெளியிட அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து, குறித்த சாரதி சம்பவயிடத்தில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் துணிச்சலான வழிப்போக்கர்கள் அவரைப் பிடித்து காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே, இது ஒரு பயங்கரவாதச் செயல் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார், கைப்பற்றப்பட்ட கடிதம் தொடர்பில் எல்லா சாத்தியங்களையும் ஆராய்ந்து, நேரில் பார்த்தவர்களை விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சாரதியின் பின்னணி தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு உளவியல் பாதிப்பு இருந்துள்ளதா அல்லது இந்த விபத்து திட்டமிடப்பட்ட சம்பவமா என்பது தொடர்பில் உறுதி செய்யப்படும் என அதிகாரிகல் தரப்பில் தெரிவித்துள்ளனர்.