புதுடெல்லி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததைத்தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள் உருவங்கள் மற்றும் சிலைகள் இருப்பதாகவும் அதனை வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக்கூறி இந்து அமைப்புகள் சார்பில் வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்குகளை வாரணாசி மாவட்ட நீதிபதி ரவிக்குமார் திவாகர் விசாரிப்பார் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஞானவாபி வழக்கை விசாரிக்கும் கீழமை நீதிமன்ற நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஒருவர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனை காவல் ஆணையருக்கு அனுப்பி வைத்த நீதிபதி, இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் இதனைத்தொடர்ந்து நீதிபதிக்கு ஒன்பது போலீசார் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.