வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்தை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், கடலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி நதி நீர் பாயும் சில பகுதிகளிலும் இயல்பாக 3.20 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பே டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 4,964 கி.மீ. தூரத்திற்கு தூர் வாருதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடக்கூடிய நாள் ஜுன் 12-ம் தேதி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த ஆண்டு ஜுன் 12-ம் தேதிக்கு முன்பே அதாவது மே மாதம் 24-ம் தேதியே நீர் திறந்து விடப்பட்டது அனைவரும் அறிந்ததே.
சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மேட்டூர் அணை திறந்துவிடப்பட்ட வரலாறு இதுவரையில் கிடையாது. இதுதான் முதல் முறை. இந்த வரலாற்று சாதனையானது இந்த ஆண்டில்தான் நிகழ்ந்திருக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.2 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே துவக்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் காக்கப்படும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் மாற்றுப் பயிர் வகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.
வேளாண் பெருமக்களின் நலன் கருதி இந்த ஆண்டும் ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இத் திட்டத்தின் மூலம் 3 லட்சம் உழவர்கள் பயன் பெறுவார்கள் என கூறியள்ளார். இக் கூட்டதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், மற்றம் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எஸ்.இர்ஷாத் அஹமது
தஞ்சாவூர்