தாராபுரம் பாசன விவசாயிகள் சங்க தேர்தல்: பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: தாராபுரம் பாசன விவசாயிகள் சங்க தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உப்பாறு அணை, பரம்பிக்குளம், ஆழியார், அமராவதி உள்ளிட்ட சுமார் 31 நீர் நிலைகளின் நீரை பயன்படுத்துவோருக்கான சங்கத்துக்கு நிர்வாக குழு தேர்தலை நடத்த குமரேசன் என்பவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து, மாவட்ட ஆட்சியர் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சுகுமார் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் அதிகாரியான குமரேசன், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ரகசிய வாக்கெடுப்பை நடத்தி, வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களை எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் நிராகரித்துள்ளார்.

நிர்வாக குழுவினுடைய 31 தலைவர்கள் மற்றும் 136 உறுப்பினர்களை தேர்வு செய்து ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார்.
தேர்தல் நடைமுறையை முறையாக பின்பற்றாமல் நிர்வாகக் குழுவை தேர்வு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தேர்தல் அதிகாரி செய்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர் கோரிய உத்தரவை பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.