முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, வரும் 12-ம் தேதி நடை பெற உள்ளது. முருகப் பெருமானின் ஜன்ம நட்சத்திரமான வைகாசி மாதம் ’விசாக’ நட்சத்திரத்தன்று வைகாசி விசாக பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, இத்திருவிழா வரும் 12-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற உள்ளது.
அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலையில் சுவாமி ஜயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை அடைகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை தரிசனம் செய்தால் கிடைக்க கூடியப் பலன் வைகாசி விசாகத் திருவிழா அன்று முருகனை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதிகம். பல மாவட்டங்களில் இருந்தும் பாத யாத்திரையாக முருக பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், வைகாசி விசாகத் திருவிழாவின் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் டாக்டர். செந்தில்ராஜ் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன், “வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மூன்று நாள்கள், சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் செல்வதற்கு 120 சிறப்பு பேருந்துகள் உட்பட 220 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். கடலில் குளிப்பவர்கள், திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பக்தர்கள், சர்ப்பக் காவடி எடுத்து வர அனுமதி கிடையாது. மீறி எடுத்து வந்தால், பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.