துறைமுக நகர திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 40 வருட காலத்திற்கு விசேட வரிச்சலுகைகளை வழங்குவதற்காக, முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்தார்.
“அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் அமைக்கப்பட்ட நாட்டின் முக்கிய திட்டமான துறைமுக நகர் திட்டம் (Port city) அதி விசேடமானது. உலகெங்கிலும் உள்ள போட்டி நாடுகளின் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நமது நாடு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்க உள்ளது.
மேலும், உலகப் பொருளாதார வீழ்ச்சியால், முதலீட்டை ஈர்ப்பது கடினமான இலக்காக மாறியுள்ளது. உதாரணமாக, ஓமான் போன்ற நாடுகள், தமது நாட்டின் துறைமுகங்களை அண்டிய முழு நிலப்பரப்பையும் ஒவ்வொரு நாட்டிற்கும் பல்வேறு தொழில்கள் மற்றும் வணிகங்களை ஆரம்பிப்பதற்கு பெரும் வரிச் சலுகைகளின் கீழ் வழங்கியுள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வெளிநாட்டு முதலீடுகள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளதால், எமது நாட்டில் உள்ள பெருமளவிலான உள்ளூர் வர்த்தகர்கள் தற்போது தமது கைத்தொழில் மற்றும் வர்த்தகங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பங்களாதேஷ், எத்தியோப்பியா, கென்யா போன்ற நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் போர்ட் சிட்டிக்கு கிடைத்துள்ளது. இவ்வாறானதொரு தனியான வேலைத்திட்டத்திற்கு வரலாற்றில் கிடைத்து மிகப் பெரிய முதலீடு இதுவாகும். அதற்கான நிதிச் சந்தையை உருவாக்கவும், வங்கிகள், காப்புறுதி, நிதி நிறுவனங்கள், சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல்கள், பாடசாலைகள் மற்றும் இதர திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 40 வருட காலத்திற்கு விசேட வரிச்சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
இதனை சர்வதேச ரீதியில் ஏனைய நாடுகளுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்வது முக்கியம். இந்த சந்தர்ப்பத்தில் முதலீட்டின் மூலமாவது எமது நாட்டுக்கு தேவையான டொலர்கள் கிடைத்தால், எண்ணெய், எரிவாயு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார் .