சென்னை: துறைத் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு முகாம்களில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் துறைத் தேர்வுகளை ஆசிரியர்கள் பலர் எழுத உள்ளனர். எனவே, துறைத் தேர்வில் பங்கேற்க வசதியாக, அந்த நாளில் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் துறைத் தேர்வில் பங்கேற்பதை, அவர்களின் ஹால்டிக்கெட் வாயிலாக உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகளை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.