நடுகல் எடுக்கும் முறைகள்; தொல்காப்பியம் கூறும் அதிசயத் தகவல்கள்; தொல் தமிழர்களின் விந்தை உலகம்!

காதலும், வீரமும் பிரிக்க முடியாவண்ணம் ஒருங்கே அமையப்பெற்றது தமிழர் வாழ்வியல். முடியுடைய வேந்தர் மூவரும், வேளிரும் தமக்குள் மேலாண்மை, அதிகாரம் நிலைகொள்ளப் போரிட்டுக் கொண்டனர். குடிமக்களும் தம்முள், அக்காலத்திய பெருஞ்செல்வமான மாடுகளைக் காக்கும் பொருட்டும், கவரும் பொருட்டும் மாண்டுள்ளனர். இவற்றை சங்க இலக்கியங்கள் `தொரு பூசல்’, `ஆநிரை கவர்தல்’ எனக் கூறுகின்றன.

உயர்பதுக்கை

இவர்கள் மட்டுமல்லாது குறிஞ்சி நில மாந்தர்கள் பலர் வேட்டையாடும்போதோ, அல்லது ஊரை அச்சுறுத்திய பன்றி, புலி, போன்ற விலங்கினத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற சமர் புரிந்துள்ளனர். இவ்வாறு நிகழ்ந்த சமரில் இறந்துபோன வீரர்களை நினைவு கூர்ந்து மக்கள் போற்றி வந்துள்ளனர்.

போரில் மரணம் என்பது வழக்கமான ஒன்று. அப்போர்தனில் பெருவீரம் காட்டியோர், மக்களைக் காப்பாற்ற விலங்கினங்களோடு போராடித் தன்னுயிரை இழந்தோர் ஆகியோருக்கு மக்கள் அவர்கள் இறந்த இடத்திலேயே கல்லெழுப்பி வணங்கும் வழக்கம் இருந்துள்ளது. அவை நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் என அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவ்வகை கற்களை ‘Hero stones’ என்பர்.

முற் காலத்தில் இறந்தவர் நினைவாய் ஒரு பெரிய கல்லெழுப்பி வணங்கினர். பின்னர் கி.மு 4-ம் நூற்றாண்டு அளவில் அக்கற்களில் இறந்தவரின் பெயரையும், ஊரையும் இறந்த காரணத்தையும் கல்லில் பொறித்துள்ளனர். புலிமான் கோம்பை, தாதபுரம், பொற்பனைக் கோட்டை நடுகற்கள் இதை எடுத்துக்காட்டுகின்றன. அதற்கடுத்ததாக இறந்தவரின் உருவத்தினை ஒரு கோட்டுருவமாய் வரைந்துள்ளனர். இவ்வகை உருவங்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் கிடைக்கின்றன.

நடுகல்

அதற்கடுத்த காலங்களில் இறந்தவரின் உருவத்தினையும், அவர் காட்டிய வீரத்தையும் சிற்பமாய் வடிக்கும் வழக்கம் வந்தது. பல்லவர் காலம் தொட்டு நாயக்கர் காலம்வரை இவ்வகை நடுகல் நிறைய கிடைக்கின்றன. இக்கற்களிள் அந்த வீரனின் காலத்தில் இருந்த மன்னரின் பெயர், அரசு, ஆட்சியாண்டு, இறந்தவரின் விவரம், உருவம், இறப்பிற்குக் காரணம் ஆகியவை முழுதாய் பொறித்துள்ளனர். இவ்வாறு இறந்துபட்டவர்களின் குடும்பத்தாருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. நிறைய நிலங்கள் தானமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நிலம் “உதிரப்பட்டி நிலம்” என அழைக்கப்படும்.

நாட்டிற்காக, அல்லது தன் குடும்பத்திற்காகவோ, பெருவீரம் காட்டி இறப்போரை, மக்கள் மறவாது வணங்கினர். அவ்வாறு இறந்தோர் நினைவாய்க் கல்லெடுத்து வணங்கும் வழக்கத்தை நம் முன்னோர் போற்றி வந்துள்ளதற்குப் பல சான்றுகள் நம்மிடையே உள்ளன. தற்காலம் வரையிலுமே தம் குடும்பத்தில் எவரேனும் இறந்தால், அவர் நினைவாக நீத்தார்கடன் செலுத்தும்போது கல்லை வைத்து, அதனைச்சுற்றி அவர் உடுத்திய உடை, அவருக்கு பிடித்த உணவுப்பொருள்களை படைக்கும் வழக்கம் பெருமளவில் காணப்படுகிறது. அதற்குக் ‘கல்லெடுத்தல்’ என்று பெயர்.

தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் இவ்வகை மரபை ஆறு வகை நிலைகளாய் பிரிக்கிறார்,

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல்– சீர்த்தரு சிறப்பின் பெரும்படை, வாழ்தல்

இந்த ஆறுநிலைக் கூறுகளும் நடுகல் குறித்து வருபவையே,

இதிலுள்ள பெரும்படையும், வாழ்த்தலும் நடுகல் வழிபாட்டை குறிப்பதாகும். இதன் அடிப்படையிலேயே நடுகற்கள் எழுப்பியுள்ளனர். முதலில் கல்லெடுக்கும் நிலையில் இருந்து படிப்படியாய் வழிபடும் நிலைக்கு நடுகல் வழிபாடு உயர்ந்தது.

நடுகல் எடுக்கும் முறைகள்

நடுகல் எடுக்கும் முறைகள்:

தொல்காப்பியம் கூறும் ஆறு கூறுகளை ஆராய்ந்தால், அதில் நடுகல் எடுக்கும் முறை குறித்து வருவதை உணரலாம்.

1. (காட்சி) இறந்த வீரனுக்கு நடுகல் எடுக்க விரும்புவோர், நல்ல வகையான கல்லைத் தேடி செல்வர்.

2.(கால்கோள்) கல்லைத்தேடி தேர்ந்தெடுத்தவுடன், மாலையிட்டு, மது படைத்து, அக்கல்லை கொண்டு வருதல். கல்லைக் கொண்டுவரும்பொழுது பறையிசை ஒலிக்க அதை எடுத்து வருதல்.

3.(நீர்ப்படை) கல்லை கொண்டுவந்த பின், அதனை நீர்நிலைப் பகுதியில் கிடத்தி அக்கல்லை முதலில் குளிர்வித்தல், கல்லின் வெம்மை தணிந்தபின், அக்கல்லில் இறந்தவரின் பெயர், குலம், என்ன காரணமாக இறந்தார் என்பதை எழுத்தாக வெட்டுதல்.

4.(நடுதல்) கல்லை வடிவுபடுத்தி, எழுத்து பொறித்தபின் செம்மறியாடு பலியிட்டு, மலரும் மயிற்பீலியும் அலங்கரிக்க அக்கல்லை நடுதல். பின்பு மது படையல் இடுதல்.

5.(பெரும்படை) நட்டக்கல்லிற்குக் கூரை அமைத்து வழிபடுதல்.

6.(வாழ்தல்)இறந்தவர் வழியினரும், நட்டவரும் நடுகல்லை வணங்குதல். அந்தக் கூரையே பின்னர் கோயிலாக மாறுதல்.

சங்க இலக்கிய நூல்கள் பலவும் நடுகல் வழிபாட்டின் சிறப்பை எடுத்து இயம்புகின்றன. பெருங்கற்காலச் சின்னங்கள் பலவற்றிலும் நடுகல் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன!

பதுக்கை

அகநானூற்று பாடல் ஒன்று ‘உயர்பதுக்கை’ என்ற சொல்லைக் குறிக்கிறது. பதுக்கையானது உயரமாக இருப்பதனால் இவ்வாறு அழைத்தனர்.

“சிலை ஏறட்ட கணைவீழ் வம்பலர் உயர்பதுக்கை இவர்ந்த ததர்கொடி அதிரல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் கரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயவின்”

ஆறலை கள்வர் வில்லில் கோர்த்து எய்த அம்பினால் வழிப்போக்கர் இறந்தார். அவர் உடலை மூடிய உயர்ந்த கற்குவியல்களின் மீது காட்டுமல்லிகை ஏறிப்படரும். அத்தகைய நடுகல்லாகிய தெய்வத்திற்கு நாட்பலியிட்டு வழிபடுவர். இப்பாடல் உயர்ந்தபெரும் பதுக்கையைப் பற்றிக் கூறுகிறது!

மற்றொரு பாடல்

‘இருங்கேழ் இரலை சேக்கும் பரல் உயர்பதுக்கை

கடுங்கண் மழவர் களவு உழவு’ என்று கூறுகிறது. இவ்வுயர் பதுக்கையிடையே மறைந்து அஞ்சாமையுடைய மழநாட்டார் உழவுபோல் களவுசெய்ய இடமாய் அமைந்தது எனத் தெரிவிக்கிறது.

படத்தில் காணப்படும் பதுக்கை இவ்வகை உயர்பதுக்கை வகையைச் சார்ந்ததே. இன்னும் இன்னும் நடுகல் பற்றிய தகவல்களும், இறை வழிபாடு தொடங்கிய விதமும் பற்றி விரிவாகக் காண்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.