லண்டன்:பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அந்நாட்டு பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி அடிக்கடி மது விருந்து வைத்தது சர்ச்சையானது. அவர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தபோதும், எதிர்க்கட்சிகள் பதவி விலக வலியுறுத்தின.ஜான்சன் மீதான புகார்களுக்கு வலு சேர்க்க மேலும் பல தகவல்கள் வெளியாகின. அவர் சார்ந்துள்ள பழமைவாத கட்சியின் எம்.பி.,க்கள் பலர், கட்சித் தலைமையில் இருந்து ஜான்சன் விலக வலியுறுத்தினர்.
அத்துடன் அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கட்சியின் உயர் மட்டக் குழுவிடம் அளித்தனர்.இதையடுத்து, நேற்று முன்தினம் போரிஸ் ஜான்சன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அந்நாட்டு பார்லி.,யில் இந்திய நேரப்படி நள்ளிரவில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஜான்சன் பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து 211 எம்.பி.,க்களும், ஆதரவு தெரிவித்து 148 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர்.
இதையடுத்து 63 ஓட்டுகள் வித்தியாசத்தில் போரிஸ் ஜான்சனின் ஆட்சி தப்பியது.”இது நாட்டுக்கும், அரசியலுக்கும் நன்மை அளிக்கும் முடிவு. இனி மக்கள் நலன் சார்ந்த பணியில் அரசு முழுமையாக கவனம் செலுத்த முடியும்,” என, போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். ஆனாலும், மிக குறைவான ஓட்டு சதவீதத்தில் ஜான்சன் வெற்றி பெற்று இருப்பது அவரது எதிர்கால அரசியலில் பாதிப்பை உண்டாக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Advertisement