நாடு முழுதும் போலீசாருக்கு… ஒரே சீருடை ! மத்திய அரசு அதிரடி திட்டம்| Dinamalar

ஒரு நாடு, ஒரே ரேஷன்; ஒரு நாடு, ஒரே ஓய்வூதியம் என, மத்திய அரசு பல திட்டங்களை ஒரே மாதிரியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, ‘ஒரு நாடு, ஒரே போலீஸ் சீருடை’ திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு ௨௦௧௪ல் பதவியேற்றது முதல், பல திட்டங்களை நாடு முழுதும் ஒரே மாதிரியாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு நாடு, ஒரே ரேஷன்; ஒரு நாடு, ஒரே ஓய்வூதியம் உள்ளிட்ட பல திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.நாட்டில் அடிக்கடி தேர்தல் நடப்பதை தடுக்கும் வகையில், ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி விரும்புகிறார். இந்த வகையில், ஒரு நாடு, ஒரே போலீஸ் சீருடை
திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அரசு விரும்புகிறது.

சீருடையில் மாற்றங்கள்

நாட்டில் தற்போது காவல் துறை, மாநில அரசுகளின் அதிகாரத்துக்குட்பட்டதாக இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம், போலீஸ் சீருடையும் வேறுபடுகிறது. மேற்கு வங்கத்தில் தலைநகர் கோல்கட்டாவில் மட்டும் போலீசார் வெள்ளை சீருடை அணிகின்றனர்.
மாநிலத்தின் மற்ற பகுதி களில் போலீசார் காக்கி சீருடை அணிகின்றனர். கோவாவில் போலீசாரின் சீருடை நீல நிற பேன்ட், வெள்ளை சட்டையாக உள்ளது. புதுச்சேரியில் போலீசாரின் சீருடை இப்போதும் பிரான்சில் உள்ளது போலவே
இருக்கிறது. இப்படி மாநிலத்துக்கு மாநிலம், போலீசார் சீருடையில் வேறுபாடுகள் உள்ளன. நாடு முழுதும் அவர்களுக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்’ நாடு முழுதும் போலீசாருக்கு ஒரே சீருடை அளிப்பதற்காக, ஒன்பது விதமான சீருடைகளை வடிவமைத்து, மத்திய அரசுக்கு கடந்த ௨௦௧௭ல் அனுப்பியது.
போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆலோசனையுடன், ‘பேன்ட், சட்டை, மழை கோட், ஹெல்மெட்’ உட்பட அனைத்தையும் வடிவமைத்து அனுப்பியது.

இந்நிலையில், மாநில டி.ஜி.பி.,க்களுக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கடந்த மாதம் ௨ல் எழுதிய கடிதத்தில், மாநிலத்தில் போலீசாரின் சீருடை, அணியும் தொப்பி, சின்னங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிவிக்கும்படி
கேட்டிருந்தது. ஆனால், அதற்கான காரணத்தை தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவிக்கவில்லை. இந்த கடிதத்துக்கு, பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் பதில் அனுப்பவில்லை.

நினைவூட்டல் கடிதம்

இதையடுத்து, கடந்த மாதம் ௨௪ம் தேதி, இது தொடர்பாக மற்றொரு நினைவூட்டல் கடிதம் ஒன்றை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அனுப்பியது. இதற்கு தமிழகம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆந்திரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பதில்
அளிக்கவில்லை. போலீஸ் சீருடை பற்றிய விபரங்களை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கேட்டுள்ளது, மாநில அரசுகளுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. போலீசை பொது பட்டியலில் கொண்டு வருவதற்கான மத்திய அரசின் நடவடிக்கையாக இது இருக்கலாம் என அவை கருதுகின்றன.
மாநில அரசுகள் சந்தேகப்படுவதற்கு காரணமும் உள்ளது. இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய ஆதாரங்கள் சட்டம் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்ய, ஆய்வுக் குழு ஒன்றை கடந்த மார்ச்சில் மத்திய அரசு நியமித்தது.
மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக சட்டம் – ஒழுங்கு இருக்கும் நிலையில், தங்களின் ஆலோசனைகளை கேட்காமல், மத்திய அரசு ஆய்வுக் குழுவை நியமித்தது, பல மாநிலங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

சட்டத் திருத்தம்

ஆனால், மாநில, யூனியன் பிரதேச அரசுகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திய பின் தான், ஆய்வுக் குழுவை அமைத்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையே, ‘நிடி ஆயோக்’ உறுப்பினர் பிபேக் தேபராய், ‘போலீசை மாநில அரசின் பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்ற, சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என கூறியுள்ளார்.
இதையடுத்து, ஒரு நாடு, ஒரே போலீஸ் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன் முதல் கட்டமாக, நாடு முழுதும் போலீசாருக்கு ஒரே சீருடை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.