நெல்லை, பாளையங்கோட்டை கோட்டூர்ப் பகுதியில் குடியிருந்து வருபவர் முகமது (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). 74 வயது முதியவரான அவருக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்துள்ளன. அதனால் அவர் கால் விரலில் ஏற்பட்ட புண் நீண்டகாலமாக ஆறாமல் அவருக்கு தொந்தரவு கொடுத்துள்ளது.
அதனால் அவர் மகன், தந்தையை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள சி.எ.ஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சர்க்கரை நோய் இருப்பதால் காலில் ஒரு விரலை ஆபரேஷன் செய்து அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
அதற்கு குடும்பத்தினர் சம்மதித்ததால் முகமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முகமதுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதைக்கேட்டு அக்பர் முகமது, அவர் மகன் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன், அவரை அழைத்துக் கொண்டு வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரும் தெரிவித்து விட்டனர்.
அதையடுத்து, முகமதை அவர் குடும்பத்தினர் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மீண்டும் ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. அதில், அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
74 வயது முதியவரான தனக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதாக தவறாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததால் அவமானத்தில் கூனிக் குறுகியுள்ளார் முகமது. அதனால் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை எடுக்க மனமின்றி வீடு திரும்பிய அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர் மகன் வேதனையுடன் தெரிவிக்கிறார்.
தவறான ரத்தப் பரிசோதனை முடிவைத் தெரிவித்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரைச் சந்தித்த முகமதின் மகனிடம் மிகுந்த அலட்சியத்துடன், `சில நேரங்களில் இது போல தவறான முடிவு வருவது இயல்புதான்’ என்று கூறி அனுப்பியுள்ளனர். அதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அவர், தனியார் மருத்துவமனைமீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இது குறித்துப் பேசும் அவரின் உறவினர்கள், “இல்லாத நோயை இருப்பதாகக் கூறி தவறான மருத்துவ அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ஹெ.ஐ.வி என்ற நோய்த் தொற்று இருப்பதாகச் சொன்னதால் பல ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்துவிட்ட முகமது வேதனையும் அவமானமும் அடைந்தார்.மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளோம்” என்றார்கள்.
இது குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் கேட்டதற்கு, “ரத்தப் பரிசோதனையில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். வேறு எதுவும் இப்போது பேச முடியாது” என்று முடித்துக் கொண்டார்கள்.