மான்சா: பஞ்சாப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் மூசேவாலாவின் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பஞ்சாப் மாநிலம் மூசா கிராமத்தை சேர்ந்த பாடகர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் சித்து மூசேவாலா. இவர், கடந்த மாதம் 29ம் தேதி மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், கொல்லப்பட்ட மூசேவாலாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சண்டிகர் வந்தார் ராகுல். பின்னர், அங்கிருந்து காரில் மூசேவாலாவின் வீட்டிற்கு சென்றார். சுமார் 50 நிமிடங்கள் அங்கிருந்த ராகுல், மூசேவாலா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘பஞ்சாப்பில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பஞ்சாப்பில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவது ஆளும் ஆம் ஆத்மி அரசின் திறனுக்கு அப்பாற்பட்டது’ என குற்றம்சாட்டினார். * மாஜி அமைச்சர் கைதுராகுல் காந்தி நேற்று பஞ்சாப்புக்கு வந்த நிலையில், அம்மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சாதுசிங் தரம் சேட்டை மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமரீந்தர் சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் சாதுசிங் தரம் சேட். இவர் தனது பதவிக்காலத்தில் தனியார் நிறுவனம் வனப்பகுதியில் 25,000 மரங்களை வெட்டிக் கொள்ள ரூ.1.25 கோடி கமிஷன் பெற்றதாக பஞ்சாப் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சாதுசிங் தரம் சேட் நேற்று கைது செய்யப்பட்டார்.