இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க, இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. மின்பற்றாக்குறை நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில் மின்சாரத்தை சேமிக்கவும், மின் பயன்பாட்டை குறைக்கவும், சனிக்கிழமையும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகப்படியான மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமணநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை அந்நாட்டுப் பிரதமரின் அறிவுத்தலின் படி நடைமுறைப்படுத்தப்படுவதாக ஆதாரங்களை மேற்கொள் காட்டி உள்ளூர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தத் தடையுத்தரவை கடுமையாக அமல்படுத்தும் படி, இஸ்லாமாபாத் நகர காவல்துறை மற்றும் நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமீறல் செயல்களில் ஈடுபடுவோர் மீது நகர நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். அதேபோல் தலைநகரில் நடக்கும் திருமணத்தில் ஒரே ஒரு உணவுக்கு வழங்க மட்டுமே அனுமதி உண்டு என்று மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், எரிபொருள் வாங்குவதற்கு பாகிஸ்தானிடம் பணம் இல்லை என்று தெரிவித்தாக மற்றொரு உள்ளூர் ஊடகமான ARY நியூஸ் தெரிவித்துள்ளது.