முல்தான்,
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி முல்தானில் இன்று நடக்கிறது. இந்த வாரத்தில் முல்தானில் 113 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனவே வெயில் தான் இவ்விரு அணி வீரர்களுக்கும் கடும் சவாலாக இருக்கும். வெயிலின் தாக்குதலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடாக, ஆட்டத்தின் இடையே வீரர்களுக்கு கழுத்தில் குளிர்ச்சிக்காக வைக்கப்படும் ‘ஐஸ்பேக்’, பனியன் மற்றும் கூடுதலாக ஒரு முறை தண்ணீர் வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
நெதர்லாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்தோடு வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்குகிறது. இருப்பினும் உள்ளூர் சூழலில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெயில் காரணமாக ஆட்டத்தை தாமதமாக உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும்.